📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 25, 2026 09:04 AM

மேலாண்மை ஆணையத்திடம் முறையிடுங்கள்; தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மேலாண்மை ஆணையத்திடம் முறையிடுங்கள்; தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

- டில்லி சிறப்பு நிருபர் -

'காவிரியில் விகிதாச்சார அடிப்படையில் நீர் திறப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிடுங்கள்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திஉள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தினமும் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீரை திறந்து விடுமாறு, கடந்த மாதம் 30ம் தேதி கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த தவறியதால், தமிழக அரசு மற்றும் தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 17ல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா திறந்து விடவில்லை; மழையால் வந்த உபரி நீரை தேக்க முடியாததால் திறந்து விட்டுள்ளது' என முறையிட்டது. மேலும், விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட வேண்டும் என முறையிட்டது.

இதையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் அறிக்கைகளை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் முன்வைத்த வாதம்:

தமிழகத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் காவிரி நீர் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உத்தரவிடுவதில்லை.

இதனால், தமிழகத்தில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் 78 டி.எம்.சி.,க்கும் அதிகமாக தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு உரிய நீரை தர மறுக்கின்றனர். இவ்வாறு அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடகா நீரை திறந்து விட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

'தமிழகத்திற்கு தற்போது நீர் வருவதில் பிரச்னை இல்லை எனும்போது, நீர் திறக்கவில்லை என எப்படி கூறுகிறீர்கள்? அணைகளில் போதிய அளவுக்கு நீர் இருப்பு இருந்தும், தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை?' என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ''தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்து உரிய தரவுகளுடன் விரிவாக விளக்கம் அளிக்கிறோம். அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது,'' என்றார்.

இதை தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களின் வாதங்களையும் விரிவாக கேட்கப் போவதில்லை. தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை காவரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகி முறையிடுமாறு உத்தரவிடுகிறோம். காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கோரிக்கைகளை பரிசீலிக்காவிட்டால், தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஆக., 31ம் தேதி ஒத்தி வைத்தனர். அப்போது, கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி யில் திறந்த நீரின் அளவு மற்றும் பிலிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வந்து சேர்ந்த நீரின் அளவு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.