அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைந்து தரிசனம்
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைந்து தரிசனம் - அமைச்சர் ரமேஷ் கொடுத்த அப்டேட்
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Published : August 26, 2026 at 11:05 PM IST
திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
உலகப் பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (ஆக.26) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைக் குறித்து நேரில் பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அமைச்சர் ரமேஷ், விஐபி அல்லது சிறப்பு தரிசனப் பகுதிகளில் இருந்து மட்டும் ஆய்வு செய்யாமல், பொதுமக்களுடன் இணைந்து பொதுத் தரிசன வரிசையில் நின்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் தரிசனத்திற்காக எவ்வளவு நேரம் காத்திருக்கின்றனர்?, வரிசையில் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்கின்றனர்? என்பது குறித்தும் பக்தர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி பாதுகாப்பாகவும், விரைவாகவும் தரிசனம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ரமேஷ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறைகள் அதிகாரிகள், திருக்கோயிலின் செயல் அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பந்த விநாயகர் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ரமேஷ், தொடர்ந்து அருள்மிகு அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் வழிபாடு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், "அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருக்கோயில் என்பது முழுமையாக இறைவனை வழிபடுவதற்கான புனிதமான இடமாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். திருக்கோயிலுக்குள் வரும் பக்தர்கள் இறைவனை வழிபடுவதற்கு பதிலாக செல்போன்களில் புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளப் பதிவுகளை உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, திருக்கோயிலில் உள்ள சிலைகள் மற்றும் சன்னதிகளை புகைப்படம் எடுப்பது, திருக்கோயில் வளாகத்திற்குள் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுப்பது போன்றவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருக்கோயிலின் புனிதத்தன்மையைப் பாதுகாத்து, பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை வழிபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம்; இதற்காக ஏற்கனவே 50- க்கும் மேற்பட்ட முதுநிலைக் கோயில்களில் செல்போன்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் திருக்கோயிலிலும் பக்தர்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் புனிதத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்றார்.