சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்களிக்கும் விருதாளர்கள்
தேசியச் சுற்றுப்புற வாரியம் தனது 17வது ‘சுற்றுச்சூழல் தோழர்’ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியைச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் நடத்தியது.
சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மைக்குப் பங்களித்தோரின் முயற்சிகளையும் சாதனைகளையும் அங்கீகரிக்கும் வகையில் இந்தத் தேசிய விருது ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த ஆண்டின் வெற்றியாளர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்கிச் சிறப்பித்தார்.
இவ்வாண்டு மொத்தம் 14 பேருக்குச் ‘சுற்றுச்சூழல் தோழர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
“மிகவும் நகரமயமாக்கப்பட்ட, மக்கள்நெருக்கம் மிக்க நாடான சிங்கப்பூர், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளது. இச்சவால்களை எதிர்கொள்ள வலுவான சமூகப் பிணைப்புகளும் கூட்டு நடவடிக்கைகளும் தேவைப்படும்,” என்று கூறிய அமைச்சர் ஃபூ, நாட்டின் சுற்றுச்சூழல் எதிர்காலத்தில் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் முக்கியப் பங்கு உண்டு என்று வலியுறுத்தினார்.
குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியில் ஆசிரியராகவும் அதன் சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றிய 62 வயது பத்மராணி ஸ்ரீவத்சன் இவ்விருதை வென்றார்.
அவர் இரண்டு முக்கியத் திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் கல்வியில் பெரும்பங்களித்து வருகிறார். அவரது முதல் திட்டம் உணவுக் கழிவுகளைப் பயனுள்ள உரமாக மாற்றுவது தொடர்பானது.
“உணவு வீணடிக்கப்படுவதைப் பார்த்து, ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தபோதுதான் இது தொடங்கியது. முதலில் வீட்டில் உரம் தயாரிக்கத் தொடங்கி, பின்னர் அதை என் பள்ளிக்குக் கொண்டுசென்று மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன். நீடித்த நிலைத்தன்மை பற்றியும் சுற்றுச்சூழலைப் பற்றியும் அறிந்துகொள்வது முக்கியம்; அதை இளவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும்,” என்றார் பத்மராணி.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பத்மராணியின் இரண்டாவது திட்டத்தில் அவர் டெட்ரா பேக் சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து, பானப் பெட்டிகளை மறுசுழற்சி செய்வதை வழிநடத்தினார். இதன்மூலம் 2025ஆம் ஆண்டில் மாணவர்கள் 1,704 பானப் பெட்டிகளை மறுசுழற்சி செய்தனர்.
அவர் கடந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றபோதிலும், தன்னால் முடிந்த இடங்களில் உதவியாற்றி வருகிறார். தனது உரம் தயாரிக்கும் திட்டத்தை விரிவுபடுத்தி, கூடுதலானோரை இதில் ஈடுபடுத்த விரும்புகிறார்.
செங்ஹுவா இளையர் வலையமைப்புத் தலைவரான 31 வயது அருண்ராஜ் சிதம்பரத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
அருண்ராஜின் தலைமையின்கீழ், செங்ஹுவா உணவு மீட்புத் திட்டத்தில் இளையர்களின் பங்கேற்பு 30 விழுகாட்டு வரை அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உட்கொள்ளப்படாத உணவுகளை வீணாக்காமல் தேவையானவர்களிடம் அவர் கொண்டுசேர்க்கிறார்.
மே 2022 முதல், ‘செங்ஹுவாவை சுத்தப்படுத்தலாம்’ என்ற இயக்கத்தின் முதன்மை ஏற்பாட்டாளராகச் செயல்படும் அருண்ராஜ், மாணவர்களை ஒருங்கிணைத்துப் பொது இடங்களில் குப்பைகளை அகற்றி, சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை வழிநடத்தி வருகிறார். “தொடர்ந்து மாணவர்களை இதில் ஈடுபடுத்தி, புதிய திட்டங்களைத் தொடங்க விரும்புகிறேன். தற்போது குப்பைகளைக் கொண்டு ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் யோசனையில் இருக்கிறோம்,” என்றார் அருண்ராஜ்.
இதுவரை 186 சுற்றுச்சூழல் தோழர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். விருது பெற்றவர்கள் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்த, சுற்றுப்புற வாரியத்தின் நிதியிலிருந்து $30,000 வரை அல்லது அவர்களின் செலவுகளில் 80 விழுக்காடு வரையிலான மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.