📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 02, 2026 01:31 AM

“அரசியல் சட்ட விரோதம்”

“அரசியல் சட்ட விரோதம்”

தமிழகத்தில் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, முதல் பட்ஜெட் அறிக்கையை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிதியமைச்சர் மரியா வில்சன் தாக்கல் செய்யவுள்ளார். அதையடுத்து, ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது நடந்த ஒரு நிகழ்வு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் வினோத் இன்று திருமலை ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அமைச்சருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்திருந்தனர். தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. மேலும், தீர்த்தம் மற்றும் பிரசாதங்களும் வழங்கப்பட்டு, தேவஸ்தானம் சார்பில் அமைச்சர் கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் ஆலயத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வினோத், "தமிழ்நாட்டில் புதிய அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த பட்ஜெட் வெற்றிகரமாக அமையவும், மாநில மக்களுக்கு நன்மை பயக்கவும், ஏழுமலையானின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்காக திருமலைக்கு வந்து தரிசனம் செய்தேன்" என்று கூறினார். மேலும், தன்னுடன் 2026–2027 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையையும் கொண்டு சென்று, கோவிலில் தரிசனம் செய்துள்ளார். தமிழகச் சட்டமன்ற வரலாற்றிலேயே, அரசின் அதிகாரப்பூர்வ பட்ஜெட் ஆவணம் அவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, சொந்த மாநில எல்லையைத் தாண்டி வேறொரு மாநிலக் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜை செய்யப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு, சட்டமன்றத்தின் ரகசியக் காப்புப் பிரமாண விதிகளை மீறியதா என்ற கேள்வியும், பொதுவெளியில் பட்ஜெட் ஆவணம் எடுத்துச் செல்லப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

இந்த விதிமீறல் செயலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல. அவை மக்களின் வரிப்பணம் எவ்வாறு செலவிடப்படும் என்பதைக் கூறும் அரசியல் சாசன ஆவணம். தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்காக அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.