📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 04, 2026 08:07 PM

அதிகரிக்கும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான பங்காளித்துவத்துக்கு அழைப்பு

அதிகரிக்கும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான பங்காளித்துவத்துக்கு அழைப்பு

தேசியச் சமூக சேவை மன்றத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு கிரெகரி விஜயேந்திரன், நாட்டின் சிக்கலான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள சமூக சேவை அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மூத்த வழக்கறிஞரான இவர், சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் தமது மூன்றாண்டுப் பதவிக்காலத்தைத் தொடங்கியுள்ளார். பராமரிப்பாளர்களுக்கு ஏற்படும் சோர்வு, மனநலப் பிரச்சினைகள், சமுதாயத்திலிருந்து ஒதுங்கித் தனியாக இருப்பது போன்ற பல்வேறு சவால்களுக்கு விரைவாக உதவி கிடைப்பதை உறுதிசெய்வது அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி, நிர்வாகப் பணிகளைக் குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், சமூகப் பணியின் முக்கிய அங்கமான மனிதப் பண்புநலன்களை இழந்துவிடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

சமூக சேவைக்கான தேவை அதிகரிக்கும்போது ஆதரவு வழங்குவது எவ்வளவு முக்கியமோ அதே போல் சமூக சேவை மீது அதிகம் சார்ந்திருக்கும் நிலை ஏற்படுவதைத் தடுப்பது மிகவும் முக்கியம் என்று திரு விஜயேந்திரன் வலியுறுத்தினார்.

சில தனிநபர்களும் குடும்பங்களும் படிப்படியாக சுயசார்புடன் இருக்கும் ஆற்றலை பெறக்கூடும். மற்றவர்களுக்கு, அவர்களது சூழ்நிலை காரணமாக நீண்டகால உதவி தேவைப்படக்கூடும் என்றார் அவர்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்கள் கௌரவமாக வாழ்வதற்கு வழிவகுப்பதே இலக்காக இருக்க வேண்டும் என்று திரு விஜயேந்திரன் கூறினார்.

நிதி திரட்டுவதில் சவால்கள் நிலவும் இச்சூழலில், சமூகச் சேவை அமைப்புகள் தங்களின் பிரதான பலங்களில் கவனம் செலுத்தி, மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில் அமைப்புகளுக்கு இடையே கூடுதல் பங்காளித்துவ உறவுகள் மலர வேண்டும் என்று திரு விஜயேந்திரன் விருப்பம் தெரிவித்தார்.