வடமேற்கு வட்டாரத்தில் புதிதாகக் குழந்தை பிறந்துள்ள குடும்பங்களுக்கு பற்றுச்சீட்டுகள், அத்தியாவசியப் பொருள்கள்
வடமேற்கு வட்டாரத்தில், புதிதாகக் குழந்தை பிறந்துள்ள ஏறத்தாழ 3,000 குடும்பங்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருள்களும் $200 வரையிலான பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.
இந்தப் புதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும்.
மேலும், வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் நிதியுதவித் திட்டங்களுக்கான தனிநபர் வருமானத் தகுதிவரம்பு $1,000லிருந்து $1,500ஆக உயர்த்தப்படும்.
இதன் மூலம் கூடுதலாகக் கிட்டத்தட்ட 6,000 குடியிருப்பாளர்கள் உதவிபெறத் தகுதி பெறுவார்கள்.
மரினா பே சொகுசுக் கப்பல் முனையத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) நடைபெற்ற வடமேற்கு வட்டாரக் கூட்டம், நியமன விழா ஆகியவற்றில் இத்தகவல்கள் அறிவிக்கப்பட்டன.
பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிறந்த திட்டங்கள் மக்களை ஒன்றிணைப்பதோடு, மக்கள், தொண்டூழியர்கள், வணிக நிறுவனங்கள் ஆகிய தரப்பினர் ஒருவருக்கொருவர் உதவவும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று பிரதமர் தமது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
“அரசாங்கம் நமக்கு மேலும் உதவி வழங்கும் வரை அனைவரும் காத்திருக்கலாம் என்று மக்கள் சொல்லும் நிலையை நாம் அடைய விரும்பவில்லை,” என்று அவர் இத்திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மன்றத்தின் 9ஆம் தவணைக்காலத்தில் பொறுப்பேற்றோர்க்கு விடைகொடுத்த வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம், 10ஆம் தவணைக்காலத்தில் பொறுப்பேற்போரை வரவேற்றார்.
இந்தப் புதிய மேம்பாடுகள் குடியிருப்பாளர்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் என்றும் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் அவர் விளக்கினார்.
“வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம் வெறும் திட்டங்களை நடத்துவதோடு நின்றுவிடக்கூடாது. சிறந்த முறையில் மக்களை இணைக்கவும் அவர்களுக்கு நல்வழி வகுக்க உதவவும் வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
குடும்பங்கள், தனிநபர் ஆதரவுகளைத் தாண்டி, வடமேற்கு வட்டாரத்தின் ‘வீகேர்’ நிதி, வடமேற்கு ‘ஜிராஃப்’ நிதி ஆகிய இரு நிதிகளும் சமூக, சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளுக்காக ஒவ்வொரு திட்டத்துக்கும் $10,000 வரை வழங்கும்.
கூடுதலாக, மன்றத்தின் 10ஆம் தவணைக்காலத்தில் புதிய சமூக மேம்பாட்டு மன்றம் (CDC) தனது இணை மானிய நிதியை (Divisional Matching Grant Vote) மேம்படுத்தவுள்ளது.
இதன் மூலம் இணை மானிய விகிதம் 1:1.5 என்பதிலிருந்து 1:2.5ஆக உயர்த்தப்படுவதோடு, ஒரு பிரிவுக்கான அதிகபட்ச நிதிவரம்பு $80,000ஆக நிர்ணயிக்கப்படும்.
மன்றத்தின் புதிய தவணைக்காலத்திற்குப் புதிய உறுப்பினர்கள் 25 பேர் உட்பட மொத்தம் 62 பேர் அடுத்த மூன்றாண்டுகளுக்கான பதவிக்காலத்தைத் தொடங்குவார்கள்.
அவர்களில் ஒருவர் நீக்குப்போக்குடன்கூடிய குறுகியகால ஒப்பந்தத்தின்கீழ் துணை ஆசிரியராகப் பணிபுரியும் 42 வயதான மரியம் நாச்சியார்.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் வடமேற்கு வட்டாரத்தின் அடித்தளத் தலைவராகப் பணியாற்றிய பிறகு, அவர் வட்டார மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
புதிய வட்டார மன்ற உறுப்பினராக, அனைத்துக் குடியிருப்பாளர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்த விரும்புகிறார்.
“இரட்டைப் பொறுப்புகள் வகிக்கும் தலைமுறையைச் சேர்ந்ததால் என் பெற்றோரும் என் குழந்தைகளும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை நான் உணர்கிறேன்,” என்று மரியம் தெரிவித்தார்.
ஓர் அடித்தளத் தலைவராகத் தனது தற்போதைய பொறுப்புகளின் இயல்பான அடுத்தகட்டமே வட்டார மன்ற உறுப்பினர் ஆவதாகும் என்று அவர் கூறினார்.
“இப்போது நான் சமூகத்திற்குப் பெரிய அளவில் பங்களிக்க முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.