தமிழக அரசைக் கண்டித்து நெசவாளர்கள் கருப்புக் கொடி போராட்டம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
தமிழக அரசைக் கண்டித்து நெசவாளர்கள் கருப்புக் கொடி போராட்டம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில், பல்வேறு கோரிக்களைகளை வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய நெசவாளர்கள் தமிழக அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் நெசவாளர்கள் தாங்கள் தயாரித்து வைத்திருக்கும் வேட்டி, சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி, நேற்று கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், இன்று காலை நகரில் உள்ள மாயாண்டிபட்டி தெரு, ஊருணிபட்டி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களை சேர்ந்த நெசவாளர்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி வீதிகளில் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும், தமிழக அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். வில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் ஊர்வலம் வரும்போது, நகர் இன்ஸ்பெக்டர் மாரியப்பான் தலைமையிலான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நெசவாளர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில், ‘நாங்கள் தயாரித்து வைத்திருக்கும் வேட்டி, சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். தமிழக அரசு தலையிட்டு எங்களது கோரிக்களை நிறைவேற்றாவிட்டால், பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.