அதிமுகவின் உண்மையான தொண்டன் தவெகவின் வலையில் சிக்கமாட்டான்
அதிமுகவின் உண்மையான தொண்டன் தவெகவின் வலையில் சிக்கமாட்டான்- ஆர்.பி.உதயகுமார் பேச்சு
"அதிமுகவில் அத்தனை பதவிகளையும் ருசித்துவிட்டு அதிகாரப் பசிக்காக தவெகவுக்கு சிலர் சென்றிருக்கிறார்கள்" என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
Published : August 8, 2026 at 7:52 PM IST
தூத்துக்குடி: அதிமுக உண்மையான தொண்டர் யாரும், தவெகவின் வலையில் சிக்கமாட்டார்கள் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில், மாவட்ட அதிமுக, ஜெயலலிதா பேரவையின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், "2026 சட்டமன்றத் தேர்தல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவதற்கு சாதகமாக இருந்தது. நம் எதிரி திமுக தான் என்று சொல்லி சொல்லி வளர்ந்து இருக்கின்றோம். ஆனால் விஜய் முதல்வராக வந்துவிட்டார். தமிழக முதல்வர் விஜய் நாட்டிற்காக, மக்களுக்காக, மண்ணிற்காக என்ன செய்தார்?, விஜய் பட்டினி போராட்டம் நடத்தினாரா? உரிமை போராட்டம் நடத்தினாரா? எதையும் அவர் செய்யவில்லை.
கன்னியாகுமரியில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, மீனவர்கள் நிவாரணத் தொகை 8000 ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்று விஜய் உறுதி அளித்திருந்தார். ஆனால், மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை 6000 ரூபாயில் இருந்து 7000 ரூபாயாக உயர்த்தப்படும் என்கிறார் அமைச்சர் மரிய வில்சன். இதனைக் கேட்ட அதிகாரிகள் தலையை பிய்த்துக் கொள்கிறார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில், 35 சதவீத மக்கள்தான் விசில் சின்னத்திற்கு வாக்கு அளித்துள்ளார்கள். 65 சதவீத மக்கள் விஜய் வேண்டாம் என்றார்கள். 68 சதவீதம் திமுக வேண்டாம் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீமான், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தோல்வி அடைந்த நிலையில், 98 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி.
தியேட்டரில், முதலமைச்சர் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், தவெகவினர் அழுதார்கள். அவர்களிடம், "அழாதீர்கள், தினமும் தலைமை செயலகத்தில் நடிக்கிறாரே அங்கே போய் பாருங்கள்" என்றேன்.
ஊரார் வீட்டு நெய்யை எடுத்து உங்கள் வீட்டில் ஸ்வீட் செய்யாதீர்கள் என்று ஒரு கூட்டத்தில் விஜய் பேசினார். ஆனால் அதிமுக எம்எல்ஏகளை விஜய் விலைக்கு வாங்குகிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் வேறு மாநிலம் வருவதாக கூறினால் அந்த மாநிலத்தில் உள்ளவர்கள் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பார்கள். ஆனால் விஜய் வர வேண்டாம் என்று கூறினால் அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது.
ஒரு சமயம், மெர்சல் படத்தை வெளியிட முடியவில்லை. அப்போது செய்தித் துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு, படம் வெளியீடு தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான்தான் சந்திக்க ஏற்பாடு செய்தேன். அப்போது எங்களை விட்டுவிட்டு விஜய்யை அழைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை சந்திக்கச் சென்றார் கடம்பூர் ராஜு. இப்போது எங்களை விட்டு விட்டு சென்றுள்ளார்.
முதலமைச்சர் விஜய் ஆள் பிடித்துக் கொண்டே இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் எப்போது இடைத்தேர்தல் வரும் என்று இலவு காத்த கிளி போல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவை அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். அதிமுகவில் அத்தனை பதவிகளையும் ருசித்து விட்டு அதிகாரப் பசிக்காக அங்கு சிலர் சென்றிருக்கிறார்கள். அதிமுகவில் இருந்த கொழுத்த மீன்கள் வேண்டுமானால் உங்களின் வாயில் சிக்கும். ஆனால் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எவரும் சிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக பட்ஜெட்டில் பெயர் மாற்றம், இடமாற்றம் தவிர எதுவும் இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
தவெக தேர்தல் வாக்குறுதியில் மகளிர்க்கு மாதம் ரூ.2500, 6 சிலிண்டர்கள், மகளிர்களுக்கு தமிழகம் முழுவதும் கட்டணமில்லா பேருந்து சேவை, படித்த பட்டதாரிகளுக்கு 4,000 ரூபாய் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், இவை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மூன்று மாதங்களில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள்.
ரூ.1.22 லட்சம் கோடிக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகள் ஆனாலும் கடன் சுமையை குறைக்க முடியாது என்று துறையின் செயலாளர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, இன்ஸ்டா, ரீல்ஸ் போன்ற மாய கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை தாண்டி அனைத்து மாநிலங்களிலும் பெய்ட் இன்ப்ளூயன்சர்கள் கட்டமைத்து வருகிறார்கள். விஜய்க்கு எந்த பதவி மீது மோகம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு ஆபத்தை நோக்கி மட்டும் செல்வது தெரிகிறது.
வரம்பு மீறி பேசும் பெண் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புக்கும், வறட்சி நிவாரணத்திற்கும் வேறுபாடு தெரியாத முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாடு, மாயாஜால திமுக ஆட்சியில் இருந்து, விஜய் ஆட்சியிடம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.