📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 23, 2026 10:31 PM

'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை: தலைமைச் செயலகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை: தலைமைச் செயலகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை: தலைமைச் செயலகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வரும் சூழலில், காவல்துறையின் இந்த பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Published : July 23, 2026 at 10:23 PM IST

சென்னை: சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக நுழைந்து பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்திய சம்பவத்திற்கு பிறகு, இந்தியாவின் கடல் எல்லைகளை பலப்படுத்த மத்திய அரசு அனைத்து கடலோர மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ' சாகர் கவச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை இன்று (ஜூலை 23) தொடங்கியது. இது நாளை வரை தொடர்ந்து 48 மணி நேரம் நடைபெறும். இந்த ஒத்திகையில், கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினர், பயங்கரவாதிகள் போல வேடமணிந்து கடல் வழியாக கரைக்கு வந்து நகர்ப்புற பகுதிகளில் நுழைய முயற்சிப்பது, அதி முக்கியமான இடங்களில் மர்மமான பொருட்களை வைப்பது போன்ற முயற்சியில் ஈடுபடுவார்கள்.

அந்த முயற்சிகளை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அமைப்பினர் கண்காணித்து தடுத்து நிறுத்துவது, சந்தேக நபர்களை அடையாளம் கண்டு பிடிப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை நடைபெறும்.

இந்த ஒத்திகையில் இந்திய கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்புக் குழுமம், மத்திய தொழில் பாதுகாப்புப் படை , மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவுகள், தமிழ்நாடு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்று வருகின்றன.

மேலும், இந்த சாகர் கவச் ஒத்திகையை முன்னிட்டு சென்னை முழுவதும் கடலோர எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, துறைமுகச் சாலை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேரி-கார்டுகள் அமைத்து, வாகனங்கள் மற்றும் பொதுமக்களிடம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்திலும் சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்திற்குள் வருபவர்கள், அனைவரும் கட்டாயமாக தங்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். தலைமைச் செயலக பணியாளர்கள், ஊடகத்தினர், அரசு அதிகாரிகள் என யாராக இருந்தாலும் ஒரே மாதிரியான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மேலும், இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே தலைமைச் செயலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த ஒத்திகையில் காவல்துறையினருக்கும் எந்தவித விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை. பணிக்காக தலைமைச் செயலகத்திற்குள் செல்லும் காவல்துறையினரும் அடையாள அட்டையை காண்பித்ததுடன், முழுமையான பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.