📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 15, 2026 04:33 AM

சென்னை கடற்கரை நிலையத்தில் சிக்னல் பழுது 2 மணி நேர சேவை பாதிப்பால் பயணியர் அவதி

சென்னை கடற்கரை நிலையத்தில் சிக்னல் பழுது 2 மணி நேர சேவை பாதிப்பால் பயணியர் அவதி

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ‘சிக்னல்’ கோளாறால், இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர்.

சென்னை புறநகர் ரயில் சேவையில், கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு தடத்தில், தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4:50 மணி அளவில், திடீரென ‘சிக்னல்’ கோளாறு ஏற்பட்டது. இதனால், கடற்கரையில் இருந்து தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பயணியர், தண்டவாளங்களில் இறங்கி நீண்ட துாரம் நடந்து சென்று, மாநகர பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள், சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், கடற்கரை, கோட்டை, பூங்கா, எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அலைமோதியது.

இதற்கிடையே, கடற்கரை – பூங்கா இடையே ஒரு பகுதியாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பூங்காவில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு தற்காலிகமாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. சில ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு, திரும்பி இயக்கப்பட்டது.

கடற்கரை நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பயணியர், நிலைய மேலாளர் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், அவர்களை சமரசம் செய்து பூங்கா நிலையம் வழியாக பயணிக்க அனுப்பினர். இரவு 7:30 மணிக்கு சிக்னல் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணி முடிந்தது. இதையடுத்து, ரயில்கள் இயக்கம் சீரானது.