சென்னை மாநகராட்சி பகுதிகளில் கழிவு கலந்த குடிநீர் விநியோகம்?
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கழிவு கலந்த குடிநீர் விநியோகம்?- மாமன்ற கூட்டத்தில் மண்டலக் குழுத் தலைவர் ராஜன் பகிரங்க புகார்
சென்னை மாநகராட்சிக்கும் நிதி கிடையாது, குடிநீரிலும் சுகாதாரம் கிடையாது என்ற நிலை மாற வேண்டும் என மண்டலக் குழுத் தலைவர் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
Published : August 28, 2026 at 8:58 PM IST
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவு கலந்துள்ளதாகவும், தன்னிடம் பரிசோதனை அறிக்கை இருப்பதாகவும் மண்டலக் குழுத் தலைவர் ராஜன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஆக.28) ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசுக்கு தங்களின் எதிர்ப்பைப் பதிவுச் செய்யும் வகையில் மாமன்றக் கூட்டத்திற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.
கூட்டத்தில் பேசிய வளசரவாக்கம் மண்டலக் குழுத் தலைவர் ராஜன், "மாநகராட்சியின் 10- வது மண்டலத்திற்கு உட்பட்ட 145, 148 ஆகிய வார்டுகளுக்கு சென்னை குடிநீர் வடிகால் வாரியம் விநியோகம் செய்யும் குடிநீரில் பாக்டீரியா உள்ளது. மண்டல அலுவலரின் துரித நடவடிக்கையால் உயிர்சேதம் தடுக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பாத்திரம் சுகாதாரமாக இல்லை, சரியில்லை என்று கூறி அபராதம் விதிக்கிறோம். சாலையில் குப்பைப் போடுவதற்கும் அபராதம் விதிக்கிறோம்.
குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டணம் செலுத்துகிறோம். நாம் குடித்துவிட்டு வந்திருக்கும் தண்ணீர் கூட மலம் கலந்ததாக இருக்கும். இதுதான் நிலைமை, இதற்கான ஆய்வகம் அளித்துள்ள அறிக்கை உள்ளது. 15 மண்டலங்களில் இருந்தும் குடிநீரை எடுத்து பரிசோதனை செய்துள்ளோம். மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை மூலமாக எல்லாவற்றையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த பாக்டீரியாவால் மஞ்சள் காமாலை, காலரா, டைபாய்டு, போலியோ, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்கள் வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மாநகராட்சி நிர்வாகமும், சென்னை குடிநீர் வடிகால் வாரியமும் முதலமைச்சரின் துறையில் தான் வருகிறது. கரப்பான் பூச்சிக் கட்சியின் நிறுவனர் அப்ஜீத் தீப்கே, இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கூறினார். அது கடந்த காலம். முதலமைச்சர் நேரடி பார்வையில் இருக்கும் துறைத்தான் நகராட்சியும், சென்னை குடிநீர் கழிவுநீர் அகற்றும் வாரியமும்.
மாநகராட்சிக்கும் நிதி கிடையாது, குடிநீரிலும் சுகாதாரம் கிடையாது என்ற நிலை மாற வேண்டும். சென்னை மாநகராட்சியில் கழிவு கலந்த குடிநீரை குடிக்கிறோம். அதில் குளிக்கிறோம்" என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
பின்னர், குடிநீர் தொடர்பான பரிசோதனை அறிக்கையை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் மண்டலக் குழுத் தலைவர் ராஜன் வழங்கினார்.