செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கான முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தியது ஐகோர்ட்
செந்தில் பாலாஜி, அசோக் குமார்
சென்னை: தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக யூடியூபர் திருநாவுக்கரசு உள்பட 14 பேரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது. அதன்படி, இருவரும் காலை, மாலை என இருவேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
இந்தச் சூழலில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி கைதானவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, குதிரை பேர வழக்கை விசாரிக்கக்கூடாது என திருவல்லிக்கேணி போலீஸாருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவி்ட்டுள்ளனர்.
இதையடுத்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஏற்கெனவே விதிக்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி, இவர்களை விசாரணைக்கு தேவைப்படும்போது மட்டும் போலீஸார் சம்மன் பிறப்பித்து அழைக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இருவருக்கு ஜாமீன்
இந்த வழக்கில் போலீஸார் யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 14 பேரை கைது செய்திருந்தனர். இதில் ஏற்கெனவே பலருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் கைதாகி சிறையில் உள்ள கருணாநிதி மற்றும் சரவணன் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.