📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 22, 2026 05:00 PM

செப்.01 முதல் திரையரங்குகளில் புதிய தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது

செப்.01 முதல் திரையரங்குகளில் புதிய தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது

செப்.01 முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல்

8 வாரம் கழித்துதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுக்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிபந்தனை விதித்துள்ளது.

Published : August 22, 2026 at 4:43 PM IST

சென்னை: விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவினைக் கண்டித்து செப்.01 முதல் திரையரங்குகளில் புதிய தமிழ் திரைபபடங்கள் வெளியிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு உரிமையாளர்கள் சங்கத் திரையரங்கு நிர்வாகிகள் தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவுகள் குறித்து பேசப்பட்டது.

கூட்டத்திற்கு பின் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டி, தமிழ்நாட்டில் வருகின்ற செப்டம்பர் 01- ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை எட்டு வார காலம் கழித்துதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான், அந்தந்த திரைப்படங்களை திரையரங்குளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.

பொருளாதார இழப்பு

மேலும், இந்த மாதிரியான முடிவு, தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நடைமுறையில் இல்லாதபோது, வேண்டுமென்றே தமிழ்நாட்டில் மட்டும் இந்த புதிய நடைமுறையை தன்னிச்சையாகப் புகுத்துவது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இவ்வாறான முடிவினை எடுக்கும்போது தயாரிப்பாளர்களை அழைத்துப் பேசி யாருக்கும், எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்த முடிவு

அவ்வாறு பெரும் இழப்பினை சந்தித்தும் தயாரிப்பாளர்கள் தொழில் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். எனவே, விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவினைக் கண்டித்து வருகிற செப்டம்பர் 01- ஆம் தேதி முதல் தமிழ்த் திரையுலகில் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், தமிழ்த் திரையுலகில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்துவது என்றும், தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து முடிவெடுத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், மேற்படி பிரச்சனையை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவர்களிடமும் எடுத்துரைத்து தமிழ்நாடு அரசு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வுக் காண உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.