📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 23, 2026 04:03 AM

மாணவர்கள் போராட்டம் குறித்த சர்ச்சை சுற்றறிக்கை: கல்லூரி கல்வி இணை இயக்குநர் விளக்கம் தர உத்தரவு

மாணவர்கள் போராட்டம் குறித்த சர்ச்சை சுற்றறிக்கை: கல்லூரி கல்வி இணை இயக்குநர் விளக்கம் தர உத்தரவு

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் தலைமையில் சட்டம், ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 27-ம் தேதி நடைபெற்றது.

இதில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க பள்ளிக்கல்வி,உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டன.

இதையடுத்து உயர்கல்வித் துறை சிறப்பு செயலர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கல்லூரிக் கல்வி ஆணையர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை ஆக.14-ல் அனுப்பினார்.

அதில், ‘கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும்போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பதை தடுக்க வேண்டும். இதற்காக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்தக் கருத்தைப் பின்பற்றி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடுக்க வேண்டுமென அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரி கல்வி இணை இயக்குநர் பா.சிந்தியா செல்வி, ஆக.17-ம்தேதி சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் அந்த சுற்றறிக்கையை ஆக.19-ல் உயர்கல்வி துறை திரும்பப் பெற்றது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, விளக்கம் கேட்டு இணை இயக்குநர் சிந்தியா செல்விக்கு கல்லூரிக் கல்வி ஆணையர் பா.பொன்னையா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘‘அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை, கல்லூரிக் கல்வி ஆணையர் வழியாக அல்லாமல், தங்கள் அளவிலேயே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மிகவும் முக்கியமான மற்றும் பதற்றம் ஏற்படுத்தக்கூடிய கடிதமானது, ஆணையரின் முன் அனுமதி, ஒப்புதல் பெறாமல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.