📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology August 09, 2026 07:30 AM

செயற்கை நுண்ணறிவுடன் தேசிய தினத் தமிழ்ப் பாடல்

செயற்கை நுண்ணறிவுடன் தேசிய தினத் தமிழ்ப் பாடல்

ஏறத்தாழ இரண்டறை நிமிடங்கள் நீடிக்கும் ‘சிறிய தீவு எங்கள் வீடு’ எனும் பாடல் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் தேவையற்ற பேச்சுகள் நிலவிவரும் வேளையில், தேசிய தினத்தையொட்டி இந்தப் பாடலை வெளியிட்டதாகப் பகிர்ந்தார் திரு வடிவழகன்.

செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இப்பாடலை வெளியிட்ட அவர், “நீண்ட நாளாக என் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கருத்துகளைப் பாடலாக்கினேன். சிங்கப்பூரர்கள், நாம் கண்டுள்ள அதிவேக வளர்ச்சிக்கு ஒற்றுமையும் உழைப்பும் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது. அதனை நினைவுபடுத்தவும் அதற்கு உழைத்த முன்னோரின் பெருமையையும் தேசத்தின் சிறப்பையும் இப்பாடல்மூலம் விவரித்துள்ளேன்,” என்றார் அவர்.

தாம், தமது மனைவியும் பிரபலக் கலைஞருமான விக்னேஸ்வரி வடிவழகன், தமது நண்பர்கள், மரினா பே சாண்ட்ஸ் வட்டாரம், வீவக வீடுகள், கோப்பிக்கடைகளை உள்ளடக்கிய இக்காணொளியைச் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கியது சிறந்த அனுபவம் என்றும் அவர் சொன்னார்.

“என் மனைவி, பாடகர்களை வைத்துப் பதிவு செய்து இதனை வெளியிடலாம் என்றார். அதற்கு நேரம், மனிதவளம், பொருள் செலவு தேவை. அதனை எதிர்காலத்தில் பார்க்கலாம் என்றாலும், உடனடியாக வெளியிட இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்,” என்றார் அவர்.

“வெறும் 30 நிமிடங்களில் பாடலை எழுதிவிட்டேன். பின், ‘சுனோ ஏஐ’ கருவியின் உதவியுடன் அதனைப் பாடலாக்கி, பின் பிழையற்ற காட்சிகளுடன் முழுமையாக்க 20 முதல் 25 முறை மாற்றியமைத்தேன்,” என்று திரு வடிவழகன் கூறினார்.

முகம், கட்டடங்கள், காட்சிகள், பாடலின் உணர்வு, தேவையான இசைக்கருவிகள் என எதுவும் பிழையின்றித் தாம் எதிர்பார்த்த வகையில் அமைவதற்கு உழைத்ததாகவும் அவர் சொன்னார்.

தமிழை வாழும் மொழியாக வைத்திருக்க, கலைதான் முதன்மை வழி என நம்புவதாகச் சொன்ன அவர், இந்தச் செயற்கை நுண்ணறிவுவழி பாடல் தயாரிப்பது, தாம் மொழியுடன் விளையாட அழகிய தளம் அமைத்துக் கொடுத்ததைச் சுட்டினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

நாடகம் உள்ளிட்ட எந்தக் கலையையும் தொடங்க நேரம் தேவை என்பதால், இந்தத் தொழில்நுட்பத் தளங்கள்வழி மொழிச் செயல்பாடுகளை மேற்கொள்ள இளையர்களை ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னோடி முதல், ‘ஜென் ஸீ’ வரை அனைத்துத் தலைமுறையினரும் பாடலைக் கேட்டு ரசித்துப் பாராட்டியது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் சொன்னார்.

கம்பத்து உணர்வைப் பிரதிபலிப்பது, பல்லினக் கலாசாரத்தைப் போற்றுவது அவசியம் என்பதால் அவற்றைக் காட்சிகளாக்கியுள்ளதையும் சுட்டினார் திரு வடிவழகன்.

பல்வேறு தேசிய தினப் பாடல்களைப் போலவே, இதனையும் மக்கள் கேட்டு மகிழ்வது தமக்கு மகிழ்ச்சி என்றும் கூறினார் அவர்.