📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 31, 2026 04:00 AM

சிங்கப்பூர் சிறுவர்களுக்கான புதிய தமிழ்ப் புத்தகம்

சிங்கப்பூர் சிறுவர்களுக்கான புதிய தமிழ்ப் புத்தகம்

தன் மகன்களை அடிக்கடி பொது நூலகத்திற்கு அழைத்துச் செல்லும்போது, சிங்கப்பூர்ச் சூழலுக்குப் பொருத்தமான தமிழ்ப் புத்தகங்கள் அதிகம் இல்லை என்பதை உணர்வதாகத் தாயார் விக்னேஸ்வரி ராஜூ, 40, கூறினார்.

“அடுக்குமாடிக் கட்டட அடித்தளம், எம்ஆர்டி ரயில் நிலையம் போன்ற சிங்கப்பூர் சார்ந்த காட்சிகளை ஒரு புத்தகத்தில் அடையாளம் காணும்போது இயல்பாகவே பிள்ளைகள் உற்சாகமடைகிறார்கள். அந்தப் புத்தகத்தை மேலும் படிக்க ஆர்வம் காட்டுவார்கள்,” என்றார் திருவாட்டி விக்னேஸ்வரி.

உள்ளூர்மயமாக்கப்பட்ட சிறார் புத்தகங்களை அதிகரிக்கும் முயற்சியில், விக்னேஸ்வரி ஒரு நூலை எழுத நினைத்தார்.

‘கோல்! - குழுப்பணியில் வெற்றி’ என்ற நூல் கடந்த ஜூலை மாதம் வெளிவந்தது.

இக்கதை ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்குக் குழுப்பணியின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் ஒரு பள்ளி காற்பந்து அணியைப் பற்றியது.

கதையில் வரும் கதாபாத்திரங்கள் தற்போது பள்ளி அளவில் காற்பந்து விளையாடி வரும் அவருடைய இரண்டு மகன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்று திருவாட்டிவிக்னேஸ்வரி கூறினார்.

“காற்பந்து என்பது பிள்ளைகளுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. என் மகன்களுக்கு விளையாட்டு தொடர்பான கதைகள் மிகவும் பிடிக்கும்,” என்று அவர் கூறினார்.

மேலும், அண்மையில் சிங்கப்பூர் முழுவதும் உலகக் கிண்ணக் காற்பந்து மீதான ஆர்வம் நிலவியதால், அவர் தமது கதையில் காற்பந்தாட்டத்தை மையப்படுத்தினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2024ஆம் ஆண்டில் ஓர் ஆங்கிலச் சிறுவர் புத்தகத்தை எழுதியிருந்த விக்னேஸ்வரி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் எழுதத் தயங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

“என் உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர் இந்நூலுக்கான பிழைதிருத்தம் செய்ய எனக்கு உதவினார்,” என்று நன்றியுடன் தெரிவித்தார்.

இருப்பினும், தமிழில் எழுதுவதையே திருவாட்டி விக்னேஸ்வரி மிகவும் விரும்பினார். இந்தப் புத்தகத்தை எழுதும் செயல்முறையில் தனது இரு மகன்களும் பெரும் பங்கு வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நடைபெற்றுவரும் புத்தகப் பணிகளை நான் அவர்களுக்குக் காண்பிப்பேன். அவர்களும் தங்களுடைய கருத்துகளை எனக்குத் தெரிவிப்பார்கள்,” என்றார்.

உள்ளூர்மயமாக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர் புத்தகங்கள் உரையாடலைத் தொடங்குவதற்குச் சிறந்தவை என்றும் அவை மொழித் திறனை வளர்க்க உதவுகின்றன என்றும் விக்னேஸ்வரி கருதுகிறார்.

“இந்தப் புத்தககளில் இடம்பெறும் அதே கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கான அறநெறிக் கல்வி குறித்த மேலும் பல கதைகளைப் புனைய விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார் விக்னேஸ்வரி.