📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 31, 2026 04:05 AM

சிங்கப்பூரின் கிழக்கே புதிய லாப நோக்கற்ற தனியார் மருத்துவமனை

சிங்கப்பூரின் கிழக்கே புதிய லாப நோக்கற்ற தனியார் மருத்துவமனை

சிங்கப்பூரில் உள்ள ஒரே ஒரு லாபநோக்கற்ற தனியார் உடனடி சிகிச்சை மருத்துவமனை மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையாகும்.

அதேபோன்ற இரண்டாவது மருத்துவமனை அமைப்பது குறித்த விவரங்களை அரசாங்கம் இறுதி செய்து வருகிறது.

சிங்கப்பூரின் கிழக்கிலும் மத்திய பகுதிகளிலும் தொடர்ச்சியாக மருத்துவமனைப் படுக்கைகளின் தேவை அதிகரிப்பதால், புதிய தனியார் லாபநோக்கற்ற மருத்துவமனை கிழக்கில் அமைவதற்கு ஒரு காரணம் என்று சுகாதார அமைச்சு விளக்கியுள்ளது.

இந்த இரண்டு பகுதிகளிலும் ஏற்கெனவே அரசாங்க, தனியார் மருத்துவமனைகள்அமைந்துள்ளன. இருந்தாலும் இத்தகைய முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. மேற்குப் பகுதியில் தற்போது எந்தவொரு தனியார் தீவிர சிகிச்சை மருத்துவமனையும் இல்லை.

இந்த நிலையில், பிடோக் நார்த்தில் அமையவுள்ள ஈஸ்டர்ன் பொது மருத்துவமனை 2029ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக 1,000 உடனடி சிகிச்சை படுக்கைகளை அமைக்கவிருக்கிறது.

2024ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட அந்தப் புதிய தனியார் மருத்துவமனை, 300 முதல் 400 படுக்கைகளைக் கொண்டிருக்கும். அது, கிழக்கு, மத்திய பகுதிகளில் தற்போதுள்ள குறைந்தபட்சம் 9,200 உடனடி சிகிச்சைப் படுக்கைகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தும்.

சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகை அதிகரிப்பதால் மருத்துவச் சேவைகளுக்கான தேவை கூடி வருகிறது. தீவிர சிகிச்சைப் படுக்கைகளின் எண்ணிக்கையைக் கூட்டவும் தனியார் மருத்துவச் சேவைக்கான தேர்வுகளை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் தனியார் லாப நோக்கற்ற தீவிர சிகிச்சை மருத்துவமனை கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஏப்ரல் 9ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனைக்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது லாப நோக்கற்ற மருத்துவமனையாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஏன் கிழக்குப் பகுதியில் அது அமைய வேண்டும் என்பதற்கான காரணத்தை அவர் அப்போது தெரிவிக்கவில்லை.

இடத்தேர்வு குறித்து ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், “மத்திய, கிழக்குப் பகுதிகளில் மருத்துவமனை படுக்கைகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதே முக்கியமான காரணம்,” என்றார்.

2018ஆம் ஆண்டிலிருந்து மத்திய பகுதியில் உள்ள டான் டோக் செங் மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, மேற்குப் பகுதியில் உள்ள இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை ஆகிய மூன்று அரசாங்க மருத்துவமனைகளில் படுக்கைகளின் பயன்பாடு அதிகபட்சமாக உள்ளது

டான் டோக் செங் மருத்துவமனையும் கூ டெக் புவாட் மருத்துவமனையும் 2023ல் படுக்கைகளின் அதிகபட்ச பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளன.

அந்த வகையில் டான் டோக் செங் மருத்துவமனையின் பயன்பாடு 95.8 விழுக்காடாகவும் கூ டெக் புவாட் மருத்துவமனையின் பயன்பாடு 96.9 விழுக்காடாகவும் இருக்கின்றன.

2018க்குப் பிறகு நான்கே ஆண்டுகளில் இவ்விரு மருத்துவமனைகளும் பயன்பாட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

மேற்குப் பகுதியில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை படுக்கைகளின் பயன்பாடு மிக அதிகமாக இருந்தது. இது, 2023ல் சாதனை அளவாக 93.8 விழுக்காட்டை எட்டியது.

அப்பகுதியில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, அலெக்சாண்டிரா மருத்துவமனை ஆகிய இரண்டு பிற அரசாங்க மருத்துவமனைகளும் இருக்கின்றன.

இதில் அலெக்சாண்டிரா மருத்துவமனையின் பயன்பாடு 2018ஆம் ஆண்டிலிருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளைவிட மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.

கிழக்குப் பகுதியிலும் மத்தியப் பகுதியிலும் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் புதிய மருத்துவமனையைக் கிழக்கில் கட்ட சுகாதார அமைச்சு முடிவு செய்திருக்கலாம் என்று பொதுச் சுகாதார நிபுணரான ஜெரமி லிம் கூறினார்.

“அமைச்சு, எதிர்காலத் தேவையை சரியாகக் கணித்திருக்கும்,” என்று ‘மித் ஆர் மேஜிக்: த சிங்கப்பூர் ஹெல்த்கேர் சிஸ்டம்’ என்ற நூலின் ஆசிரியருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கு மானிய கட்டணத்திலான சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய மானியத்தின் அளவு போன்ற புதிய மருத்துவமனை பற்றிய மற்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

2026ஆம் ஆண்டின் இறுதியில் அது பற்றி கூடுதல் விவரங்களை சுகாதார அமைச்சு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.