📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 29, 2026 04:03 PM

சிங்கப்பூர்: இளையர் போதைப்பொருள் குற்ற விகிதம் குறைந்தது

சிங்கப்பூர்: இளையர் போதைப்பொருள் குற்ற விகிதம் குறைந்தது

சிங்கப்பூரில் இளையர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விலகியிருக்கின்றனர். இளையர்களிடையே காணப்படும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள்ளும், குறைந்த அளவிலும் நீடித்து வருவது, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

அமைச்சு 2026ஆம் ஆண்டிற்கான ‘இளையர் மறுவாழ்வு ஆதரவின் போக்குகள் அறிக்கை’யை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) வெளியிட்டது.

அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக இளையர்களிடையே போதைக் குற்ற விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. 2024ஆம் ஆண்டில் 1,000 இளையர்களுக்கு 0.5 விகிதமாக அது பதிவாகி இருந்தது.

2024, 2025ஆம் ஆண்டுகளுக்கான தரவுகளை ஒப்பிடும்போது, இளையர் போதைப்பொருள் குற்ற விகிதம் குறிப்பிடத்தக்க மாற்றமின்றி அதே 0.5 என்ற நிலையில் நீடிப்பதாகவும் அறிக்கை கூறியது.

இந்த வகைக் குற்றங்களில் பெரும்பாலும் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட மூத்த இளையர்களே அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதும் அறிக்கை உணர்த்தும் உண்மை.

10 முதல் 16 வயதுக்குட்பட்ட இளைய வயதினரிடையே போதைப் பொருள் பயன்பாடு மிகக் குறைவாகவே காணப்படுவதாக விவரித்த அறிக்கை, போதைப் பொருள் பயன்பாடு குற்றத்தில் ஈடுபட்ட இளையர்களின் எண்ணிக்கை 2024ல் 199 ஆக இருந்த நிலையில், 2025ல் அது 206 ஆக பதிவாகியுள்ளதாகவும் சொன்னது.

இதற்கிடையே, போதைக் குற்றம் குறைந்து காணப்படும் இந்த போக்கைத் தக்கவைக்க அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இளையத் தலைமுறையைப் போதைப்பொருள் அபாயத்தில் இருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட அமைச்சுகளுக்கிடையிலான குழு, பள்ளிகள், சமூக அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு தீவிர விழிப்புணர்வுப் பிரசாரங்களை நடத்தி வருகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஆசிரியர்கள், பெற்றோர், இளையர் தலைவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் தூதர்கள் மூலமாகப் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு இளையர்களிடம் வலுவாகக் கொண்டு சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கண்டிப்பான சட்ட அமலாக்கம் காரணமாகவே, இளையர்களிடையே போதைப்பொருள் குற்றங்கள் அதிகரிக்காமல் தொடர்ந்து குறைந்த அளவிலேயே தக்கவைக்கப்பட்டு வருகின்றன என்றும் அறியப்படுகிறது