📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 20, 2026 08:03 PM

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

நான்காவது சிங்கப்பூர் - இந்தியா அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கும் இடையே மூன்று புதிய உடன்பாடுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) கையெழுத்தாகின.

உணவுப் பாதுகாப்பு, கடல்சார் மரபுடைமை, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளன.

உணவுப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு (புரிந்துணர்வு ஒப்பந்தம்)

சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA), இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) ஆகியவற்றுக்கு இடையே உணவுப் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வேளாண் உணவு வர்த்தகத்தை எளிதாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

உணவு அடையாளக் குறியீடு (labelling) நடைமுறைகள், இறக்குமதியின்போது தடுத்து நிறுத்தப்படும் அல்லது திருப்பி அனுப்பப்படும் சரக்குகள், உணவை மீட்டுக்கொள்ளுதல் (recalls), அவசரகால அறிவிப்புகள் தொடர்பான தொழில்நுட்பத் தகவல்களை இரு அமைப்புகளும் பரிமாறிக்கொள்ளும். இறக்குமதி விதிமுறைகள், சட்டங்கள், தரநிலைகள் குறித்தும் தகவல்கள் பகிரப்படும்.

கருத்தரங்குகள், பயிலரங்குகள், அதிகாரிகளின் வருகை, விரிவுரைகள், பயிற்சித் திட்டங்கள் வாயிலாக இருதரப்பு ஈடுபாடு மேலும் ஆழப்படுத்தப்படும். கொள்கைகள், சிறந்த ஒழுங்குமுறை நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பான உணவு வர்த்தகத்தை உறுதிசெய்ய இந்த ஒப்பந்தம் அடித்தளமாக அமைகிறது.

கடல்சார் மரபுடைமை ஒத்துழைப்பு (புரிந்துணர்வு ஒப்பந்தம்)

கடல்சார் மரபுடைமை ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரின் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து அமைச்சு இடையே மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதில் சிங்கப்பூரின் கலாசார, சமூக, இளையர்துறை, வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங், இந்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு நாடுகளின் பாரம்பரிய அமைப்புகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம், பயிற்சிகளை எளிதாக்குவது இந்த ஒப்பந்தத்தின் இலக்காகும்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அனைத்துலக ரீதியிலான ஈடுபாடுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் இது வழிவகுக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால கலாசாரப் பங்காளித்துவத்தை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்துகிறது.

தொலைத்தொடர்பு, ஒலிபரப்புத் துறையில் விருப்பக் கடிதம்

தொலைத்தொடர்பு, மின்னிலக்க, ஒலிபரப்புத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில் சிங்கப்பூரின் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ), இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இடையே விருப்பக் கடிதம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ முன்னிலையில், ஐஎம்டிஏ துணைத் தலைமை நிர்வாகி எய்லின் சியா, டிராய் செயலாளர் ஹரிந்தர் குமார் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இது நான்கு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.

தொலைத்தொடர்புச் சந்தை ஒழுங்குமுறை, அலைக்கற்றை மேலாண்மை, தொழில்நுட்பப் புத்தாக்கம் ஆகியவற்றில் அறிவைப் பகிர்ந்துகொள்வதோடு தொலைத்தொடர்புச் சேவைகளில் வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த நடைமுறைகளையும் இரு நாடுகளும் பரிமாறிக்கொள்ளும்.

மேலும், மின்னிலக்கத் தொலைக்காட்சி (DTT), உரிமக் கட்டமைப்புகள், ஓடிடி (OTT) சேவைகள் உள்ளிட்ட ஒலிபரப்பு விதிமுறைகள் குறித்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) போன்ற அனைத்துலகத் தளங்களில் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

இருதரப்பு ஆலோசனைகள், நிபுணர்களின் பரிமாற்றம், கூட்டுப் பயிலரங்குகள், கருத்தரங்குகள், ஆய்வுப் பயணங்கள், பயிற்சி முகாம்கள் வழியாக இந்த விருப்பக் கடிதம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.