📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 21, 2026 05:04 AM

சிங்கப்பூர் புகைமூட்டம்: காற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு

சிங்கப்பூர் புகைமூட்டம்: காற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு

சிங்கப்பூரில் புகைமூட்டப் பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்தது.

கடந்த வாரம் முன்னதாக, சிங்கப்பூரின் காற்றின் தரம் எதிர்பாராதவிதமாக மீண்டும் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றது. அதைத் தொடர்ந்து நிலைமை படிப்படியாக மோசமடைந்து, நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்தியப் பகுதிகள் என அனைத்து வட்டாரங்களிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

பின்னர், சிங்கப்பூரின் காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது.

மத்திய வட்டாரத்தைத் தவிர்த்து, நாட்டின் மற்ற அனைத்து வட்டாரங்களிலும் காற்றின் தரம் சீரடைந்து, இயல்பான மிதமான நிலைக்குத் திரும்பியது. மத்திய வட்டாரத்தில் மட்டும் காற்று இன்னும் சற்று மாசடைந்த நிலையிலேயே காணப்பட்டது.

இந்தோனீசியாவின் கலிமந்தான், சுமத்ராவில் உள்ள நிலம் மற்றும் வனத் தீயிலிருந்து வரும் புகை, சிங்கப்பூரை நோக்கி நகர்ந்ததால் சிங்கப்பூர் புகைமூட்டத்தைச் சந்தித்து வருகிறது.

கூடுதல் பாதுகாப்பு முறைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், புகைமூட்டத்திற்கான காரணம் குறித்துத் தன் மகள்களுக்கு விளக்கி வருகிறார் தாயார் கனகேஸ்வரி முத்துகுமரன், 34.

“இந்தச் சூழ்நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியம்,” என்றார்.

நிலைமை சீராகும் வரை வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியுள்ளனர் சில பெற்றோர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“என் இரு குழந்தைகளுக்கும் வெளிப்புற விளையாட்டுகளையும் நீச்சல் வகுப்புகளையும் நிறுத்தி வைத்துள்ளேன்,” என்று பகிர்ந்தார் பிரியா ரெத்தினா.

அதேவேளையில், மலேசியாவிலும் புகைமூட்டத்தின் பாதிப்பு இன்னும் தொடர்கிறது. அங்குள்ள பல முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், மக்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நமது உடல்நலத்தை எப்படிப் பாதுகாக்கலாம்?

1. காற்றின் தரம் முழுமையாகச் சீரடையும் வரை, திறந்தவெளி விளையாட்டுகளையும் வெளிப்புற நடவடிக்கைகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

2. அத்தியாவசியத் தேவைக்காக வெளியே செல்ல நேரிட்டால் தகுந்த முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

3. உடலை வறட்சியிலிருந்து பாதுகாக்க அதிகளவில் தண்ணீர் அருந்துவது அவசியம்.

4. கண் எரிச்சல், இருமல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாகப் பெற்றோரிடமோ ஆசிரியர்களிடமோ தெரிவிக்க வேண்டும்.

5. பள்ளிகளில் வழங்கப்படும் சுகாதார அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.