📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 21, 2026 03:04 AM

சிங்கப்பூர் ஒரு நம்பகமான பங்காளி: பிரிட்டன் அமைச்சர்

சிங்கப்பூர் ஒரு நம்பகமான பங்காளி: பிரிட்டன் அமைச்சர்

சிங்கப்பூருடனான பிரிட்டனின் பங்காளித்துவம் உலகிலேயே உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரிட்டனின் முதலீட்டு அமைச்சர் ஜேசன் ஸ்டாக்வுட் கூறியுள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவுக்கான முக்கிய வாயிலாகவும் சிங்கப்பூர் திகழ்வதாக அவர் சொன்னார்.

“இன்று பிரிட்டனின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் ஏறக்குறைய 60 விழுக்காட்டை மறைமுகமாகவோ நேரடியாகவோ சிங்கப்பூர் அங்கம் வகிக்கிறது,” என்று பிசினஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று ஆசிய பசிபிக் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது அவர் பேட்டியளித்தார்.

“தென்கிழக்கு ஆசியா உலகின் 5வது ஆகப்பெரிய பொருளியலாக இருப்பதால் சிங்கப்பூருடனான உறவு பிரிட்டனின் வர்த்தக, முதலீடுகளுக்கு மிக அவசியமானது. இது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பசுமைப் பொருளியல் கட்டமைப்பு போன்றவற்றால் வலுவடைந்துள்ளது,” என்று கூறிய அவர், “சிங்கப்பூரை ஒரு நம்பகமான பங்காளி,” என்று வருணித்தார்.

குறிப்பாக வட்டார வர்த்தக விதிமுறைகளை வடிவமைப்பதில் அது முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் பாராட்டினார்.

“2022ல் நடைமுறைக்கு வந்த பிரிட்டன்-சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தம், சேவை வர்த்தகத்தில் 27 விழுக்காடு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் பரந்த அளவிலான ஒப்பந்தங்களுக்கு அது ஒரு முன்மாதிரியாகவும் விளங்குகிறது,” என்று திரு ஸ்டாக்வுட் மேலும் தெரிவித்தார்.