📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 23, 2026 08:05 PM

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்: புதிய தலைவர் நியமனம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்: புதிய தலைவர் நியமனம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) முதன்மைத் தலைவர் சியே ஃபு ஹுவா, 2027 மார்ச் 31ஆம் தேதியன்று பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். பத்தாண்டுக்கும் மேலாக அவர் அந்தப் பொறுப்பை வகித்தார்.

அவரையடுத்து, பொதுச்சேவைத் துறையின் முன்னாள் முதன்மைத் தலைவர் லியோ யிப் 2027 ஏப்ரல் 1ஆம் தேதி அந்தப் பொறுப்பை ஏற்பார் என்று பல்கலைக்கழகம் புதன்கிழமை (செப்டம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசியப் பல்கலைக்கழக வர்த்தகக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் தேசியச் சம்பள மன்றத் தலைவருமான சியே, 2003ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மன்றத்தில் சேர்ந்தார். 2006 முதல் 2012 வரை அறங்காவலர் வாரியத்தில் பணியாற்றிய அவர், 2017ல் அதன் தலைவரானார். அவரது பதவிக் காலத்தில், புதிய ஆய்வுத் தளங்கள் அமைக்கப்பட்டன; கலை, சமூக அறிவியல் கல்லூரி, வடிவமைப்பு, பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை உருவாக்கப்பட்டன.

புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் லியோ யிப், பொதுச்சேவையில் நாற்பதாண்டுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். அவர் 2017 முதல் 2026 ஏப்ரல் 1 வரை பொதுச்சேவைத் துறையின் தலைவராகச் சேவையாற்றினார். முன்னதாக, அவர் மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவற்றில் நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

தம்மைத் தலைவராக நியமித்ததை உயரிய கௌரவமாகக் கருதுவதாகத் திரு லியோ யிப் கூறினார்.

கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, திரு சியேவின் சேவையைப் பாராட்டி, புதிய முதன்மைத் தலைவர் லியோ யிப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.