📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 23, 2026 07:05 PM

‘சிங்கப்பூர் உணர்வு’ என்றும் மாறாது; தேசிய உறுதிமொழியே அதன் அச்சாணி: பிரதமர்

‘சிங்கப்பூர் உணர்வு’ என்றும் மாறாது; தேசிய உறுதிமொழியே அதன் அச்சாணி: பிரதமர்

சிங்கப்பூர் அனைத்துலக அளவில் உலகிற்குத் தன் கதவுகளைத் திறந்து வைத்திருந்தாலும், நாட்டின் அடித்தளமாகவும் அனைத்து மக்களையும் ஒன்றிணைந்த மக்களாக பிணைக்கும் சக்தியாகவும் தேசிய உறுதிமொழியே திகழ்கிறது என்று கூறினார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

சிங்கப்பூரின் நான்காவது பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) நாட்டு மக்களுக்காக வழங்கிய முக்கிய உரையாகிய தேசிய தினப் பேரணி உரையில், நாட்டின் தனித்துவமான ‘சிங்கப்பூர் உணர்வும்’ தேசிய உறுதிமொழி உணர்த்தும் மாண்புகளும் என்றுமே மாறாமல் நிலைத்து நிற்கும் என்று உறுதிகூறினார்.

தேசிய உறுதிமொழியும் மாறாத அடையாளமும்

காலப்போக்கில் நாட்டின் மக்கள் தொகையும் சமூக அமைப்பும் உருமாற்றம் பெறலாம். ஆனால், சிங்கப்பூரர் என்ற பெருமிதத்தை அளிக்கும் கூட்டு அடையாளமும், ஒருவருக்கொருவர் செலுத்தும் அர்ப்பணிப்பும் என்றுமே அழியாது என்று சுட்டினார் திரு வோங்.

தேசியப் பற்றுறுதியின் 60வது ஆண்டு நிறைவு கடைப்பிடிக்கப்படும் வேளையில், ‘‘நாம் அனைவரும் ஏற்கும் தேசியப் பற்றுறுதியே நம்மை ஒரே சமூகமாக, ஒரே ஐக்கிய மக்களாக பிணைத்து வைக்கும் முதன்மைச் சக்தியாக விளங்குகிறது,’’ என்றார் பிரதமர்.

பாதுகாக்கப்படும் பன்முகத்தன்மையும் இனச் சமநிலையும்

தேசியப் பற்றுறுதி வழிகாட்டும் சமத்துவப் பாதையில், நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பு தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று கூறிய அவர், நாட்டில் உள்ள அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய இடம், மொழி, கலாசாரம், பிரதிநிதித்துவம் ஆகியவை பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிசெய்ய இனச் சமநிலை பராமரிக்கப்பட்டு வருவதாகவும் உரைத்தர்.

ஒருங்கிணைப்புக்கான இருவழி முயற்சி

தேசியப் பற்றுறுதியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இருவழி ஒருங்கிணைப்பு அவசியமாகிறது என்று சொன்ன பிரதமர், ‘‘சிங்கப்பூருக்குப் புதிதாக வருபவர்கள் இங்குள்ள வாழ்க்கை முறையோடு இணைய முயற்சி எடுக்க வேண்டும்; அதே வேளையில், உள்ளூர்வாசிகளும் திறந்த மனதுடன் அவர்களை ஏற்‌றுக்கொள்ள வேண்டும்,’’ என்றும் கேட்டுக்கொண்டார்.

நன்மையைத் திருப்பிச் செலுத்தும் நற்செயல்

இதற்குச் சிறந்த உதாரணமாக ட்வென் வீ என்பவரை அமைச்சர் பாராட்டினார். ‘‘இங்கிலாந்தில் மாணவியாகப் படித்தபோது தான் பெற்ற அன்பை நினைவுகூர்ந்து, சிங்கப்பூர் திரும்பியதும் அதைத் தன் அயல்நாட்டுச் சக ஊழியர்களுக்குத் திருப்பிச் செலுத்தினார்.

‘‘அவர்களுக்கு உள்ளூர் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியதோடு, ‘சிங்கே ஊர்வலத்திலும்’ அவர்களை ஒருங்கிணைத்துப் பங்கேற்கச் செய்தார் அவர் என்ற திரு வோங், இத்தகைய எளிய அன்பான செயல்களே அந்நியர்களை நண்பர்களாகவும், காலப்போக்கில் தேசியப் பற்றுறுதியின் கீழ் ஒன்றுபடும் சக சிங்கப்பூரர்களாகவும் மாற்றுகின்றன,’’ என்று கூறினார்.