📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 23, 2026 07:05 PM

சிங்கப்பூரில் புதிய மேற்குத் தீவு, சிங்க‌ப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் புதிய மேற்குத் தீவு, சிங்க‌ப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் வெளித் தீவுகள் பலவற்றை ஒன்றிணைத்து, புதிய மேற்குத் தீவு ஒன்று உருவாக்கப்படும்.

ஜூரோங் தீவிற்குத் தெற்கே அமைந்துள்ள செமக்காவ், புலாவ் புக்கோம், புலாவ் சுடோங், அவற்றைச் சுற்றியுள்ள மற்ற சிறிய தீவுகள் சில ஒன்றிணைக்கப்பட்டு அந்தப் புதிய தீவு உருவாக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.

ஜூரோங் தீவு உருவாக்கப்பட்ட அதே முறையில், நில மீட்புப் பணிகள் மூலம் சிறிய தீவுகள் இணைக்கப்பட்டு புதிய தீவு உருவாக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை ஆங்கிலத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தார் பிரதமர் வோங்.

பெட்ரோலிய வேதிப்பொருள்களையும் தாண்டி, புதிய தலைமுறையின் பல்வேறு அதிநவீன தேவைகளைப் பூர்த்தி செய்யும் மையமாகவும் இத்தீவு உருவெடுக்கும்.

சிங்கப்பூரின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான புதிய மின் உற்பத்தி உள்கட்டமைப்புகளையும் இங்கு அமைக்க முடியும் என்று பிரதமர் வோங் கூறினார்.

தற்போது நாட்டின் ஒரே கடலோரக் குப்பை மேட்டைக் கொண்டுள்ள செமக்காவ் தீவு, கழிவு மேலாண்மையில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

புலாவ் புக்கோம் தீவில் சிங்கப்பூரின் முதல் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை இயங்கிவருகிறது.

ராணுவ அவசரநிலைகளின்போது சிங்கப்பூர் ஆயுதப்படை பயன்படுத்தும் விமான ஓடுபாதை புலாவ் சுடோங் தீவில் அமைந்துள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“ஆயுதப்படையின் தேவைகளையும் மறந்துவிடக்கூடாது என்று அமைச்சர் சான் சுன் சிங் எனக்கு நினைவூட்டினார். அதற்கும் இங்குப் போதுமான இடம் இருக்கும்,” என்று பிரதமர் வோங் உறுதியளித்தார்.

இந்த நீண்டகாலத் திட்டம் குறித்துப் பேசிய அவர், 50, 70 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே திட்டமிடுவது சிங்கப்பூரின் வழக்கம் என்று கூறினார்.

இடப்பற்றாக்குறை ஏற்படும்வரை காத்திருக்காமல், எதிர்காலத் தலைமுறையினர் வளர்ச்சி காண்பதற்கான இடத்தை உறுதிசெய்வதற்காகவே இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் மேற்குப் பகுதியில் உள்ள மூன்று தீவுகளில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளும் சேமிப்புக் கிடங்குகளும் கட்டப்பட்டதால், சிங்கப்பூர் உலகின் முக்கிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு மையமாக உருவெடுத்தது.

நம் முன்னோர்கள் அத்துடன் நின்றுவிடாமல் ஒரு முழுமையான பெட்ரோலிய வேதிப்பொருள் தொழிற்துறையை உருவாக்கும் திட்டத்திற்கு வித்திட்டனர். மேலும், நிலம் மீட்கப்பட்டு பல தீவுகள் ஒன்றிணைக்கப்பட்டு இன்றைய ஜூரோங் தீவு உருவாக்கப்பட்டது.

இன்று ஜூரோங் தீவு பல நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், முக்கியத் தொழிற்துறைகளை ஈர்த்து, அனைத்துலக எரிசக்தி விநியோகத்தில் சிங்கப்பூரை முக்கிய நாடாக நிலைநிறுத்தியுள்ளது.

“மத்திய கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட தடங்கல்களின்போது நிரூபிக்கப்பட்டதைப் போல, நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பையும் மீள்திறனையும் ஜூரோங் தீவு வலுப்படுத்தியுள்ளது,” என்றார் பிரதமர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஜூரோங் தீவு நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களித்திருப்பதைப் போல, இப்புதிய தீவு அடுத்த 50 ஆண்டுகளையும் தாண்டி சிங்கப்பூரை வடிவமைக்க உதவும் என்றார் அவர்.