📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News November 27, 2026 04:02 PM

சிங்கப்பூரில் அப்ளைட் மெட்டீரியல்ஸ்: ஊழியர் விரிவாக்கம்

சிங்கப்பூரில் அப்ளைட் மெட்டீரியல்ஸ்: ஊழியர் விரிவாக்கம்

பகுதி மின்கடத்திச் சாதனத் தயாரிப்புப் பெருநிறுவனமான அமெரிக்காவின் அப்ளைட் மெட்டீரியல்ஸ், அதன் விரிவாக்கத்தின் ஓர் அங்கமாக சிங்கப்பூரில் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 5,000க்கும் அதிகமாக உயர்த்தவும் முதலீட்டைப் பெருக்கவும் தயாராகி வருகிறது.

கடந்த ஈராண்டுகளில் சிங்கப்பூரில் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியில் இணைத்துள்ள அந்நிறுவனம், தனது உற்பத்தித் திறனையும் ஆய்வு, மேம்பாட்டு நடவடிக்கைகளையும் இங்கு ஏற்கெனவே இருமடங்காக்கியுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கத்துடனான சிறந்த பங்காளித்துவம், நிர்வாகத் திறன், சிறந்த வர்த்தகக் கலாசாரம் ஆகியவை தங்களின் முதலீட்டுக்குக் காரணம் என்று அப்ளைட் மெட்டீரியல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கேரி டிக்கர்சன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

குடியரசில் புத்தாக்கம், ஆய்வு, மேம்பாடு ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்வதோடு, அதிக திறன்வாய்ந்த சிங்கப்பூரர்களை அவரது நிறுவனம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

கலிபோர்னியா மாநிலத்தின் சான்டா கிளாரா தலைமையகத்திற்கு வெறும் துணை மையமாக இல்லாமல், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பங்களுக்கான முக்கிய உற்பத்தித் தளமாகவும் உலகளாவிய தளவாட நடுவமாகவும் ஆய்வு மையமாகவும் சிங்கப்பூர் உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

உலகின் பத்தில் ஒரு பகுதி மின்கடத்திகளும் ஐந்தில் ஒரு பங்கு உற்பத்திச் சாதனங்களும் சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்படுகின்றன. சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ ஆறு விழுக்காட்டு அளவு பங்களிக்கும் இத்துறை 35,000க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டில் 3,000க்கும் குறைவாக இருந்த அப்ளைட் மெட்டீரியல்ஸ் ஊழியர்களின் எண்ணிக்கை, இவ்வாண்டு இறுதிக்குள் 5,000ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளை ஆதரிக்கும் வகையில், கடந்த ஜூன் மாதம் தெம்பனிஸ் வளாகத்தை $646 மில்லியன் (US$500 மில்லியன்) முதலீட்டில் அந்நிறுவனம் விரிவுபடுத்தியது.

அதன் விளைவால் சிங்கப்பூரில் பகுதி மின்கடத்தி இயந்திரங்களை ஒன்றிணைத்து, உற்பத்தி செய்து அந்நிறுவனம் ஏற்றுமதி செய்யும் அளவு தொடர்ந்து ஏற்றம் காணும்.

அதன்கீழ் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு ஏற்ற அதிநவீன தூய்மையான கணினிக் கட்டமைப்பு அறைகளுக்கான திறனும் இங்கு இருமடங்கிற்கு மேல் கணிசமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல், தைவான் ஆகிய இடங்களிலும் இந்நிறுவனம் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு, 2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிலிருந்து 2028ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய உற்பத்தியை இருமடங்காக்கவும், 2030ஆம் ஆண்டிற்குள் உற்பத்தி, ஆய்வுக்கூடத் திறன்களை இருமடங்கிற்கும் மேலாக உயர்த்தவும் அந்நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.