விவியன்: இந்தியாவை புறக்கணிக்காதே, பொறுமையாக செயல்படு
உலகப் பொருளியலில் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இந்தியாவும் மிகப் பெரிய நடுத்தர சக்தி என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாட்டின் கலந்துரையாடல் ஒன்றில், சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவைப் பற்றிய பங்கேற்பாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
“இந்தியாவிடம் நாம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அதேவேளையில், அதனை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையே மிகச் சிறந்த உறவு நிலவுகிறது.
“ஒருசில சிக்கல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இந்தியாவும் சிங்கப்பூரும் இந்த உறவால் பயனடைந்துள்ளன. அதைத் தொடர்ந்து வலுப்படுத்த நாங்கள் திட்டமிடுகிறோம்,” என்றார் டாக்டர் விவியன்.
அமெரிக்க-சீன வல்லரசுப் போட்டி, விநியோக இணைப்புகள் ஆயுதமாக்கப்படுதல், தொழில்நுட்பப் புரட்சி ஆகியவற்றால் சிறிய நாடுகள் ஆபத்தான இடைக்காலச் சூழலில் இருப்பதாக அவர் சுட்டினார்.
இத்தகைய சூழலில் எந்தவொரு தரப்பையும் தெரிவுசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாகாமல் அனைத்துப் பெரிய, நடுத்தரச் சக்திகளுடனும் நேர்மையாகவும் நிலைப்பாட்டுடனும் உறவாடுவதே சிங்கப்பூரின் அணுகுமுறை என்று அவர் கூறினார்.
“சிங்கப்பூர் என்றும் பிற நாடுகளுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டுமே தவிர பிறரால் பயன்படுத்தப்படும் கருவியாக மாறிவிடக் கூடாது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆசியானின் 60வது ஆண்டு நிறைவையொட்டி 2027ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், 11 உறுப்பு நாடுகளைக் கொண்ட இவ்வட்டாரக் கூட்டமைப்புக்கான மூன்று முக்கியக் குறிக்கோள்களை டாக்டர் விவியன் முன்வைத்தார்.
முதலாவதாக உறுப்பு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் 11 நாடுகளையும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் ஒருங்கிணைப்பது அவசியம் என்றார் அவர்.
இரண்டாவதாக, வரி அல்லாத வர்த்தகத் தடைகளைக் குறைத்து ஆசியான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தைப் பெருக்குவதோடு மின்னிலக்கப் பொருளியலுக்குத் தேவையான எரிசக்தியை வழங்கவும் ஆசியான் வட்டாரத்தை எரிசக்தி ஏற்றுமதியாளராக மாற்றவும் ஆசியான் எரிசக்திக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மூன்றாவதாக, இந்தியா, அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துப் பங்காளிகளையும் உள்ளடக்கிய, அனைவரையும் அரவணைக்கும் தளமாக ஆசியான் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தென்சீனக் கடல் விவகாரத்தில் நடத்தை விதிமுறைகளுக்கான பேச்சில் எஞ்சியுள்ள சட்டபூர்வமான அம்சங்கள் மிகவும் சிக்கலானவை என்று குறிப்பிட்ட டாக்டர் விவியன், கடல்வழி வணிகம் தடையின்றித் தொடர்வதும் மோதல்களைத் தவிர்ப்பதுமே முக்கியம் என்றார்.
மியன்மாரில் நிலவும் உள்நாட்டுப் போர் ஒரு முட்டுக்கட்டையாக நீடிப்பதால், அங்கு அமைதி திரும்ப நீண்ட காலம் பிடிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டை எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் முன்னணி ஊடகங்களான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ், சாவ்பாவ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகியவை முதன்முறையாக ஒன்றிணைந்து நடத்துகின்றன.
இந்நிகழ்ச்சிக்கு ஓசிபிசி வங்கி முதன்மை ஆதரவாளராகச் செயல்படுகிறது. அமேசான் வெப் சர்வீசஸ் அதிகாரபூர்வ ‘கிளவுட்’ பங்காளியாகவும் மரினா பே சேண்ட்ஸ் அதிகாரபூர்வ இடவசதிப் பங்காளியாகவும் இணைந்துள்ளன.