📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 31, 2026 06:00 AM

‘Hi’ விமர்சனம்: கவின்

‘Hi’ விமர்சனம்: கவின்

மனித உறவுகளுக்கு நட்பு, காதல், குடும்பம் என ஏதோ ஒன்று அடிப்படையாக இருக்கலாம். தாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஒருவர் தன்னை நேசிக்க வேண்டும் என்ற ஏக்கம் பலருக்கு வாழ்நாளில் கிடைக்காமலே போய்விடக்கூடும். அந்த உணர்வைத் தேடி ஓடும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு, இயக்குநர் விஷ்ணு எடவன் உருவாக்கியுள்ள திரைப்படம்தான் ‘ஹாய்’.

நாயகன் மயில்சாமிக்கு (கவின்) காதல் தவிர வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது. ஆனால், தொடர்ச்சியான காதல் நிராகரிப்புகளுக்குப் பிறகு, அன்பான பெற்றோர் (பாக்யராஜ் - ராதிகா) ஏற்பாடு செய்யும் திருமணத்துக்கு பயந்து வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிப் போகிறார்.

மற்றொருபுறம், தன் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுவிட்டு ஓடிச் சென்றதால் குடிப்பழக்கத்துக்கு ஆளான தந்தையின் (பிரபு) மகளான தேவயானி (நயன்தாரா), தன்னை கட்டாயப்படுத்தி ஏற்பாடு செய்யும் திருமணத்திலிருந்து தப்பித்து சென்னை வருகிறார்.

வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வீட்டை விட்டு வெளியேறிய இந்த இருவரும், சென்னையில் தற்செயலாகச் சந்திக்கிறார்கள். ஆரம்பகட்டத் தயக்கங்களுக்குப் பிறகு, இருவருக்குமான வேறுபாடுகளும், அவர்களின் சந்திப்புகளும் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றன.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் ஒரு தேர்ந்த ஓட்டுநர் போல திரைக்கதை என்னும் ஸ்டீயரிங்கை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, எப்போது வேகத்தை கூட்ட வேண்டும், எப்போது நிதானிக்க வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்பதில் தெளிவான கவனத்துடன் கதையை நகர்த்தியுள்ளார்.

கவின் - நயன் இருவருக்கும் இடையிலான காட்சிகள் ஒரு நல்ல ஹாலிவுட் ரோம்-காம் போல கியூட்டாகவும், எந்தவொரு 'கிரிஞ்ச்' தனமும் இல்லாமலும் நகர்கின்றன. அப்படியே ஒரு கட்டத்தில் கதை கோயம்புத்தூருக்கு நகர்ந்ததும், குடும்பம், நகைச்சுவை, கலாட்டாக்கள் நிறைந்த ஒரு தமிழ் ரோம்-காம் படமாக மாறுகிறது.

கவின் ஒரு நடிகராக நன்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் அவருடைய பாடி லாங்வேஜிலும் மெருகேற்றம் தெரிகிறது. இதில் உணர்வுபூர்வ காட்சிகளிலும் கூட நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்.

தொடர்ந்து பெரிய ஹீரோ படங்கள் அல்லது நாயகியை மையப்படுத்திய படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாராவுக்கு இந்த படத்தில் ஒரு ஃப்ரெஷ் ஆன கதாபாத்திரம். ஆரம்பத்தில் கிராமத்துப் பெண்ணாக அவரை ஏற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டாலும், போகப் போக தனது நடிப்பால் ஈர்த்து விடுகிறார். கவின் - நயன்தாராவின் இயல்பான கெமிஸ்ட்ரி படத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.

படத்தின் நடிகர் தேர்வு பெரும் பலம். மறைந்த இயக்குநர் பாக்யராஜ், ராதிகா, பிரபு என மூத்த நடிகர்கள் தங்கள் திறன்மிகு நடிப்பால் படத்தை முன்னோக்கி கொண்டு செல்கின்றனர். இரண்டாம் பாதியில் அதிகப்படியான கதாபாத்திரங்கள் வருவதால் கதை சற்று சிதறுவது போலத் தோன்றினாலும், மூத்த நடிகர்களின் சிறப்பான நடிப்பு அதை மறக்கடிக்கிறது.

கவினின் நண்பனாக வரும் ஆதித்யா டிவி கதிர், விஜய் டிவி குரேஷி உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர். ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு படத்திற்கு எழில் சேர்க்கின்றன. ஜென் மார்ட்டினின் பின்னணி இசை படத்துக்கு மற்றொரு பலம். பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.

படத்தின் ஒரு காட்சியில் ஒரு கதாபாத்திரம் "இனி என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்வையாளர்களே யூகித்திருப்பார்கள்" என நையாண்டி செய்யும். அந்த அளவுக்கு கதையில் பல இடங்களை யூகித்து விடமுடிகிறது. குறிப்பாக நயன்தாராவின் அம்மாவை கவின் தேடிச் செல்வது, பாத்ரூமில் நின்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் காட்சி ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம்.

என்னதான் மகனுக்காக என்றாலும் பாக்யராஜ் கதாபாத்திரம் ரூ.57 லட்சத்தை உடனே எடுத்து யாரிடமோ கொடுப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான். முதல் பாதியில் கவின் - நயன் இடையிலான உரையாடல்கள், இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸுக்கு முன்பாக ராதிகா தொடர்பான காட்சி உள்ளிட்ட பல காட்சிகள் மனதை வருடும்படி எழுதப்பட்டுள்ளன.

பயத்தின் காரணமாகத் தன் ஆசைகளை தியாகம் செய்யாமல், காதல் தன் பாதையைத்தானே கண்டடையும் என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்தியதில் இப்படம் வெற்றி பெறுகிறது. கவின் - நயன்தாராவின் இந்த ‘ஹாய்’ பார்வையாளர்களின் மனதை நெகிழ வைக்கும் ஓர் அழகான அனுபவம்.