📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 29, 2026 06:00 PM

சிறந்த தமிழாசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கல்

சிறந்த தமிழாசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கல்

வகுப்பறைகளில் தமிழ் மொழியைக் கற்பிப்பதில் கணினித் தொழில்நுட்பத்தைப் புகுத்தி, 26 ஆண்டுகளுக்கு முன்பே ‘கணினி வழி தமிழ்’ எனும் நூலின் வழி ஆழத் தடம்பதித்த முன்னோடித் தமிழாசிரியர் 68 வயது மகாதேவி பாலசுந்தரத்திற்கு இவ்வாண்டின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

செயின்ட் ஹில்டாஸ் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் இவர், தமது 42 ஆண்டுகாலத் தமிழ்ப் பணியில் கடமைக்காக மட்டும் செயல்படாமல் செய்யும் பணியை விரும்பிச் செய்ய வேண்டும் என்பதைத் தமது கற்பித்தல் தத்துவமாகக் கொண்டுள்ளார்.

அண்மையில் ‘கூகல் ஜெமினை’ போன்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சக ஆசிரியர்களுடன் இணைந்து 72 கதைகள் அடங்கிய மின்புத்தகத்தை வெளியிட்டது உட்பட இவரது பல்வேறு பணிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய சாதனையாளர்களைப் போற்றி ஆண்டுதோறும் சிறப்பிக்கும் நல்லாசிரியர் விருது விழா, சனிக்கிழமை (29 ஆகஸ்ட்), உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்றது.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ் முரசு நாளிதழ், தமிழ் வளர்ச்சிக்குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இவ்விழாவில், கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சரும் தமிழ் வளர்ச்சிக்குழுவின் தலைவருமான தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், பள்ளி முதல்வர்கள், சமூகப் பிரமுகர்கள், தமிழாசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், மாணவர்கள் என 250க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர்.

இவ்வாண்டு விருதுகளுக்குப் பள்ளி முதல்வர்கள், சக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடமிருந்து மொத்தம் 491 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 174 தகுதியான ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்பட்டதில், உன்னதப் பணியாற்றிய ஆறு கல்வியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

தொடக்கப் பள்ளிப் பிரிவிற்கான நல்லாசிரியர் விருதை ஃபூஹுவா தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர் அ. சுமதி, கேஷுவரீனா தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர் நஸிமா பானு இருவரும் பெற்றனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் ரைஹானா பீவியும், தொடக்கக் கல்லூரிப் பிரிவில் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரித் தமிழாசிரியர் கலைவாணி இளங்கோவும் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

தேசியக் கல்விக் கழகத்தின் சிறந்த தமிழ்ப் பயிற்சியாசிரியர் விருதை கிறைஸ்ட் சர்ச் உயர்நிலைப்பள்ளி இளம் ஆசிரியர் நந்தினி சிவக்குமார் வென்றார்.

“தமிழாசிரியர்களின் பணி என்பது மொழியைக் கற்பிப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது, நமது மரபு, பண்பாடு, விழுமியங்கள், அடையாளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் உன்னதச் சேவை,” என்று சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகளுக்குச் சமூகம் உறுதுணையாக நிற்கவேண்டும் என்ற அவர், வீடுகளிலும் சமூகத்திலும் பொதுவெளிகளிலும் தமிழைப் பயன்படுத்தும் வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கினால் மட்டுமே வகுப்பறைத் தமிழ், வாழும் மொழியாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.

“நாம் கற்பித்த பாடங்களை மாணவர்கள் ஒருவேளை மறந்துவிடலாம். ஆனால், நாம் அவர்களோடு சிரித்துப் பேசிய தருணங்களையும் அவர்கள் தடுமாறியபோது தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியதையும் அவர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். ஓர் ஆசிரியரின் உண்மையான தாக்கம் என்பது இதுவே,” என்றார் திரு தனபால்.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய மாணவர்களின் அதிரடிப் பறை இசையும் ஆட்டமும் அரங்கை அதிரச் செய்தன.

தமிழ் முரசு நாளிதழின் நேரடி வலையொளிக் கலந்துரையாடல் அங்கம் ஒன்றும் நடைபெற்றது. தமிழ் முரசுச் செய்தியாளர் யுகேஷ் கண்ணன் வழிநடத்திய இக்கலந்துரையாடலில், தமிழ் முரசின் வாசகர், ஊடக வளர்ச்சி ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன், தமிழ் வளர்ச்சிக்குழுத் தலைமைச் செயலாளர் மஹாலட்சுமி அமிர்தலிங்கம் இருவரும் பங்கேற்றனர்.

இதில், வகுப்பறைகளுக்கு அப்பால் தமிழை அன்றாட வாழ்வில் புழங்கும் மொழியாக மாற்றுவது குறித்தும் இளைய தலைமுறையினரைச் சமூக ஊடகங்கள் வழியாக ஈர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அடுத்த ஆண்டு முதல் பாலர் பள்ளிகளிலிருந்து தொடக்கநிலை ஒன்று, இரண்டு வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான ஒரு சிறந்த கற்றல் வளமாக ‘பாலர் முரசு’ மாணவர் இதழ் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. வீட்டில் பெற்றோரும் வகுப்பறையில் ஆசிரியர்களும் இந்த வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற தமிழ் மொழி விழாவின் ‘அக்னி’ நடன நிகழ்ச்சியில் இடம்பெற்ற ‘கண்களும் காவடி சிந்தாகட்டும்’ என்ற பாடலுக்கான காவடிச் சிந்து நடனத்தை ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் மேடையில் அரங்கேற்றினர்.

சிறப்பு விருந்தினர் திரு தினே‌ஷும் கல்வி அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் சமூகத் தலைவர்களும் வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

விழாவில் விருது பெற்ற ஆசிரியர்களின் அறிமுகக் காணொளிகள் திரையிடப்பட்டதையடுத்து, அவர்களின் மாணவர்கள் நேரடியாக மேடைக்கு வந்து, ஆசிரியர்கள் தங்களின் வாழ்வில் ஏற்படுத்திய ஆக்ககரமான தாக்கங்களைப் பகிர்ந்து கொண்டது விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்தது.