பட்டா இருந்தும் நிலம் இல்லை: தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா அலக்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தில் அவர்களுக்கான நிலம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அலக்குவார்பட்டி சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் 145 பட்டியலின குடும்பங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் அவர்களுக்கான நிலம் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல்லில் பேரணியாக வந்து மேற்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சமரசம் செய்தனர். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் மல்லிகா தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து வருவாய்த்துறையினர், போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்துக்குள் தீர்வுகாணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பொதுமக்கள் கூறியதாவது: வீட்டுமனை பட்டாவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் எங்களுக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால் பட்டா இருந்தும் நிலமற்றவர்களாக மாறி நிற்கிறோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.