சிவாஜி கணேசன் வீட்டில் சோகம்.. பிரபுவின் சகோதரி உயிரிழந்தார்..திரையுலகினர் அஞ்சலி
சென்னை: நடிப்பு சக்கரவர்த்தி மறைந்த செவாலியே சிவாஜி கணேசனின் மூத்த மகளும், தயாரிப்பாளர் ராம்குமார் மற்றும் நடிகர் பிரபுவின் சகோதரியுமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 71. இந்த துயர செய்து சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் மற்றும் தமிழ் திரையுலகினரிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சிவாஜி - கமலா தம்பதியின் மூத்த மகள்: 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். 'பராசக்தி' திரைப்படம் வெளியான அதே ஆண்டே, அன்னாரது தாய் ராஜாமணி அம்மாளின் விருப்பப்படி தன் அக்கா மகள் கமலாவை சிவாஜி கணேசன் திருமணம் செய்து கொண்டார். கவியரசு கண்ணதாசன் மணமாலை எடுத்துத் தர, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் மு.கருணாநிதி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் இந்த சீர்திருத்த திருமணம் நடைபெற்றது.
குடும்பப் பின்னணி: சிவாஜி கணேசன் - கமலா தம்பதியருக்கு சாந்தி, தேன்மொழி என இரு மகள்களும், ராம்குமார், பிரபு என இரு மகன்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தந்தை சிவாஜி கணேசன் சுயசம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துகளில் தங்களுக்கும் உரிமை பங்கு வழங்க வேண்டும் என்றும், சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் சொத்துக்களை சரியாக நிர்வகிக்காமல் வாடகை வரவுகளை தரவில்லை என்றும் சாந்தி மற்றும் அவரது சகோதரி தேன்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சாந்தி உயிரிழந்தார்: இந்நிலையில், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சாந்தி நாராயணசாமி (71) இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவாஜி கணேசன் தன் மகள் பெயரில் சாந்தி தியேட்டர் மற்றும் சாந்தி இல்லத்தை காட்டினார். அவை இன்றளவு அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றன.