📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 06:32 PM

சொந்த ஊருக்குத் திரும்பப் பேருந்தைத் தெரிவுசெய்கின்றனர் மலேசியர்கள்

சொந்த ஊருக்குத் திரும்பப் பேருந்தைத் தெரிவுசெய்கின்றனர் மலேசியர்கள்

கோலாலம்பூர்: மலேசியாவில் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, பலர் சொந்த ஊருக்குத் திரும்பப் பேருந்தைத் தெரிவுசெய்கின்றனர்.

மாதாந்தர ‘புடி95’ வகை பெட்ரோல் ஒதுக்கீட்டை இன்னும் சிறிது காலத்திற்கு நீட்டிக்கும் நோக்கத்துடன் அவர்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர்.

மலேசிய அரசாங்கத்தின் ‘புடி95’ திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானிய விலை பெட்ரோல் ஒதுக்கீடு, கடந்த மாதம் (ஏப்ரல்) 1ஆம் தேதி முதல் 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதனால், அதிகரித்துவரும் எரிபொருள் செலவினங்களைக் கட்டுப்படுத்தப் பொதுமக்கள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதன் காரணமாக, கோலாலம்பூரில் உள்ள ‘டெர்மினல் பெர்செப்பாத்து செலாத்தான்’ (TBS) பேருந்து நிலையத்தில் தற்போதைய பயணிகளின் வருகை வழக்கத்தைவிடக் கணிசமாக அதிகரித்துள்ளது.

சொந்த கார்களில் பயணம் செய்யும்போது அந்த பெட்ரோல் ஒதுக்கீடு தீர்ந்துவிட்டால், பெட்ரோல் நிரப்புவதற்கான மாதாந்தரச் செலவு இருமடங்காக உயர்வதாகப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த ஒதுக்கீடு எதிர்காலத்தில் இன்னும் குறைக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. குறிப்பாகக் குறைந்த கட்டணப் போக்குவரத்தையே பெரிதும் நம்பியிருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே பரவலான கவலையை அது ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பண்டிகைக் காலத்தில் நீண்ட தூரப் பயணத்துக்குப் பேருந்துகளைப் பயன்படுத்துவதே செலவைக் கட்டுப்படுத்த உதவும் புத்திசாலித்தனமான மாற்றுத் திட்டம் என்று மலேசியர்கள் பலரும் கருதுவதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.