📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 20, 2026 11:33 PM

சபரிவர்மன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம்

சபரிவர்மன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம்

சபரிவர்மன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் - நயினார் நாகேந்திரன் உறுதி

அஜித்குமார் கொலை வழக்கில் அப்போதைய முதலமைச்சர் சாரி சொன்னதுக்கு, சாரி வேண்டாம் சிஎம் சார், நீதி வேண்டும் என்றார். ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் சாரி கூட சொல்லவில்லை என நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

Published : July 20, 2026 at 10:28 PM IST

கன்னியாகுமரி: சபரிவர்மன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

'சபரிவர்மனை அடித்தே கொன்றுள்ளார்'

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த ஈத்தன்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் (33) போலீஸ் காவலில் இருந்தபோது இறந்தார். சபரிவர்மனை இழந்துவாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மாற்றுத்திறனாளியான சபரிவர்மனை காவலர்கள் பொய் வழக்கு போட்டு சிறையில் அடித்துக் கொலை செய்துள்ளனர். அவருடைய மரணத்திற்கு தெற்கு தாமரைக்குளம் போலீசுக்கு முழு பங்கு இருக்கிறது.

ஊனமுற்ற அவரது கையை போலீசார் மூன்று இடங்களில் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். நெஞ்சுக்கு கீழே பலத்த காயம் இருக்கிறது. சொல்லப்படாத இடத்தில் மிதித்திருக்கிறார்கள். அதில் காயம் இருக்கிறது. ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அது இல்லை. இது அவருடைய மனைவியே சொன்னது. இவ்வளவு கொடூரமான சம்பவம் நாகர்கோவில் சிறையில் அரங்கேறி இருக்கிறது. முழுக்க முழுக்க சிறை துறை ஜெயிலர்கள் ஜெகன், சிவகுமார் மற்றும் தென் தாமரைக்குளம் காவல் துணை ஆய்வாளர் பிரைட் போன்றவர்கள் சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். காவல்துறையை முதல்வர் கையில் வைத்துள்ளார். அப்படி என்றால் இதைப் பற்றி யாரிடம் போய் சொல்வது‌?" என்று நயினார் கேள்வி எழுப்பினார்.

'தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை'

மேலும் பேசிய அவர், "இன்று ஒரு எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த திமுக அரசாங்கமாவது ஒரு இரண்டு, மூன்று வருடம் கழிச்சு இந்த வேலையை செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் தவெக ஆட்சிக்கு வந்து 60 நாள்களில் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு மூன்று கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது. நேற்று மும்பை சென்றிருந்தேன். இரவு 12 மணிக்கு கூட மும்பையில் அனைத்து பெண்களும் சுதந்திரமாக நடமாட முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது.

அஜித்குமார் கொலை வழக்கில் அப்போதைய முதலமைச்சர் சாரி சொன்னதுக்கு, சாரி வேண்டாம் சிஎம் சார், நீதி வேணும்னு சொன்னார். ஆனா இந்த சபரிவர்மன் கொலை சம்பந்தமாக சி.எம் (விஜய்) இதுவரை எதுவும் பேசவில்லை. சாரி கூட சொல்லவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பாஜக சார்பில் கோருவோம்" என்றார்.

'பழனியில் நிலமோசடி நடந்துள்ளது'

பழனி நிலமோசடி குறித்த கேள்விக்கு, "பழனியில் கோயில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பாக முதன்முதலாக பாரதி ஜனதா கட்சிதான் கூறியது. ஆனால் அமைச்சர் ரமேஷ், நயினார் அண்ணனுக்கு விஷயம் தெரியவில்லை என கூறுகிறார். உண்மையிலேயே நான் அமைச்சர்களை பார்த்து கேட்பது, அந்த பத்திரப் பதிவு நடந்திருப்பது உண்மை. அது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. ஒரு ரிஜிஸ்ட்டரை மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். அந்த இடத்தை யார் வாங்கினார்கள், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று தெரியவில்லை. பழனி நிலமோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவது தொடர்பாக விரைவில் முடிவெடுப்போம்" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.