📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 02, 2026 12:05 PM

மதுராந்தகம் இடைத்தேர்தல்: ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் த.வெ.க கூட்டணி வெற்றி பெறும்

மதுராந்தகம் இடைத்தேர்தல்: ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் த.வெ.க கூட்டணி வெற்றி பெறும்

மதுராந்தகம் இடைத்தேர்தல்: ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் த.வெ.க கூட்டணி வெற்றி பெறும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசிய நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு நிலைப்பாடுகள் பலவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

Published : October 2, 2026 at 10:47 AM IST

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் த.வெ.க கூட்டணி தேர்தலை சந்தித்து வெற்றி வாகை சூடும் என ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

மதுராந்தகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளாக வி.சி.க, காங்கிரஸ், ம.தி.மு.க, ஐ.யூ.எம்.எல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

கொள்கை அடிப்படையில் உருவானது எங்கள் கூட்டணி

இந்தப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அதில், “ஒவ்வொரு கூட்டணியும் கொள்கை அடிப்படையில் தான் உருவாகின்றன. அதன்படி, மதச்சாற்ற கொள்கை, சமூக நீதி, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதுதான் இந்தக் கூட்டணியின் அடிப்படை.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் குறிப்பிட்ட குடும்பங்கள், கட்சிகளை சுற்றியே இருந்து வருகின்றன. கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, அந்தக் கட்சிகளுக்கு ஒன்று, இரண்டு சதவீதம் என்று அதிகாரத்தை கணக்குப் போட்டு வழங்கும் அரசியல் இனி மாற வேண்டும். கூட்டணி கட்சிகளின் வாக்குகளுக்கும் மக்களுக்கும் உரிய அதிகாரமும் பிரதிநிதித்துவமும் கிடைக்க வேண்டும். அதிகாரம் அனைத்து சமூகங்களுக்கும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் பரவ வேண்டும்.

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பல ஆண்டுகளாக கொள்கைக்காக அரசியல் செய்து வருகிறார்கள். திருமாவளவன், வைகோ போன்ற தலைவர்களை பணத்தால் வாங்க முடியாது.

காயிதே மில்லத் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் இஸ்லாமிய சமூகத்திலிருந்து அமைச்சர் உருவாக வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இருக்க வேண்டும். அமைச்சர் பதவி என்பது பெயருக்கு மட்டும் இருக்கக்கூடாது. அந்த அமைச்சருக்கு முழுமையான அதிகாரமும் செயல்படும் சுதந்திரமும் இருக்க வேண்டும்” என்று பேசினார்.

மக்கள் ஆதரவால் கிடைத்த வெற்றி

த.வெ.க-வின் வெற்றி குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்காமல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்று இந்த வெற்றி கிடைத்தது. மக்கள் மாற்றத்தை விரும்பியதால்தான் தவெகவுக்கு ஆதரவு கிடைத்தது. இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத வகையில் பெண்களும் இளைஞர்களும் இணைந்து ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்கியிருக்கிறார்கள்.

தவெக ஆட்சியமைத்த பிறகு அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மதச்சார்பற்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கப்பட்டது. முதலமைச்சர் பதவியை பெறுவது மட்டுமே குறிக்கோளாக இருந்திருந்தால் வேறு கூட்டணியை தேர்வு செய்திருக்கலாம். ஆனால் கொள்கைக்கான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு தலைவரிடமும் பேசி இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

அதிமுகவிலும் இன்றைக்கு பழைய நிலை இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளை நம்பியிருந்த பலர் அங்கிருந்து வெளியேறி சிலர் தவெகவில் இணைந்திருக்கிறார்கள்” என்றார்.

திமுகவின் நிலைப்பாடு மாறிவிட்டது

திமுக குறித்து பேசிய அவர், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசிய நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு நிலைப்பாடுகள் பலவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து, “ஊழலற்ற நிர்வாகம் என்பது தவெகவின் முக்கிய கொள்கை. ஒவ்வொரு துறையிலும் கமிஷன் என்ற நிலை மாற வேண்டும். அரசு திட்டங்களுக்கான நிதியில் ஏற்படும் கசிவை முதலில் தடுத்து நிறுத்தினால்தான் உண்மையான வளர்ச்சியை உருவாக்க முடியும். ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் அதிகாரம் பரவ வேண்டும்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் தவெக கூட்டணி தேர்தலை சந்திக்கும். மக்கள் நம்பிக்கையையும் கூட்டணித் தலைவர்களின் கொள்கையையும் மட்டுமே நம்பி வாக்கு கேட்கப்படும். மதுராந்தகத்தில் கிடைக்கும் வெற்றி ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் இருக்காது. மதச்சார்பற்ற சமூக நீதி அரசியலுக்கான வெற்றியாக இருக்கும்” என்றார்.