📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 07, 2026 03:33 AM

சர்ச்சை மேல் சர்ச்சை; மேலிடத்தை தூங்கவிடாமல் செய்யும் விருதுநகர் தவெக!

சர்ச்சை மேல் சர்ச்சை; மேலிடத்தை தூங்கவிடாமல் செய்யும் விருதுநகர் தவெக!

சர்ச்சை மேல் சர்ச்சை; மேலிடத்தை தூங்கவிடாமல் செய்யும் விருதுநகர் தவெக! - சாட்டை சுழற்றுவாரா விஜய்?

விருதுநகர் மாவட்ட தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது தொடர்பான செய்தி.

ஆட்சி அமைத்து முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது தமிழக வெற்றிக் கழக அரசு.

அடுத்து திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கவிருக்கிற சூழலில், ஆட்சி அமைந்த இந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே கட்சிக்குள் ஏக அக்கப்போர் என்கிறார்கள்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தொடங்கி அரசு அலுவலகங்களில் ஆய்வு என்கிற பெயரில் வட்ட, கிளைச் செயலாளர்களின் சேட்டைகள் வரை நீள்கின்றன அவை.

சகஜமாக ச‌ர்ச்சைகளில் சிக்குவது, சொந்தக் கட்சியினருடன் பஞ்சாயத்து என்கிற ரீதியில் ஒரு பட்டியல் போட்டால், இன்றைய தேதியில் விருதுநகர் மாவட்ட தவெக-வுக்குதான் முதலிடம்.

ஆமாம், மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகிய நான்கைக் கைப்பற்றியது கட்சி. மீதமுள்ள சாத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய மூன்று தொகுதிகளும் திமுக வசம் சென்றன.

அமைச்சரவை அமைத்தபோது இந்த மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்கள்... அதுவும் இருவருமே பெண்களாக இருந்தது, மக்கள் மத்தியில் 'ஆஹா' சொல்ல வைத்தது.

ஆனால் அந்த இரண்டு அமைச்சர்கள் மட்டுமல்ல, மீதமுள்ள இரண்டு எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து வென்ற நான்கு பேர் குறித்தும் இந்த மூன்று மாதங்களுக்குள் வந்த புகார்கள், சர்ச்சைகள்.... வாங்க பார்க்கலாம்.!

சர்ச்சையான ரீ....ல்ஸ்!

தொழில் துறை அமைச்சராக 29 வயதில் கீர்த்தனா பதவி ஏற்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. பதவி ஏற்பு விழாவுக்கு வரும்போதே வெற்றி பெற்ற சான்றிதழைக் கொண்டு வர மறந்தது நினைவிருக்கலாம். அங்கு ஆரம்பித்தது சர்ச்சை.

தொடர்ந்து ரீல்ஸ் போட்டு முதலீட்டாளர்களை அழைத்தது, அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவர்களின் ஆங்கில அறிவைச் சோதித்தது, தன்னுடைய அரசு வாகனத்தை கட்சிக்காரர்கள் பயன்படுத்த அனுமதித்தது என தற்போது வரை நீண்டு கொண்டே போகிறது.

இடையில் கட்சியில் மாவட்டச் செயலாளரை ஓரங்கட்டும் முயற்சியையும் ஒருபுறம் செய்து வருவதாகக் கூறுகிறார்கள் மாவட்ட உட்கட்சி விவரம் அறிந்த சிலர். மாவட்டச் செயலாளருக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தமாம். இருவரின் பஞ்சாயத்து பனையூர் வரை வந்தாலும் 'அப்படி இப்படி தான் இருக்கும், நீங்க பாத்து நடந்துகோங்க' என்பதுதான் அங்கிருந்து வரும் பதிலாக இருக்கிறதாம்.

ஜெகஜால ஜெகா!

ராஜபாளையம் தொகுதியில் வென்ற ஜெகதீஸ்வரியை சமூக நலத்துறை அமைச்சராக்கினார் விஜய். மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவரும் கீர்த்தனாவும் ஒருசேர கலந்து கொள்ள இருந்த போது, விழா பேனரில் தன் பெயரை கீர்த்தனா பெயருக்கு கீழ் போட்டுவிட்டதாக கலெக்டரை பொதுவெளியில் கடிந்து கொண்டதன் மூலம் சர்ச்சை சுழல் சிக்கினார். அப்போதே கட்சி மேலிடம் இருவரையும் அழைத்து கடிந்து கொள்ள, பிறகு சேர்ந்து செல்ஃபி எடுத்துப் பகிர்ந்தார்கள்.

அடுத்து அருகே சாத்தூரைச் சேர்ந்த தன் கட்சி நிர்வாகி ஒருவர் தன் தொகுதிக்குள் வந்து அதிகாரிகளைச் சந்திப்பதாகக் கேள்விப்பட்டு, அந்த நபரை இவர் எச்சரித்ததாக வெளியான ஆடியோ 'அவங்களா இவங்க' என மக்களை மிரட்சியடையச் செய்து விட்டது என்றே சொல்லலாம். இவர் பெயரில் வெளியான மிரட்டிய ஆடியோவைக் கேட்டால் ஆனந்தே ஆடிப் போனாலும் போகலாம்.

தொடர்ந்து டாக்டர், பத்திரிகையாளர் எனப் பல அடையாளங்களை எடுத்து விட்டது, போலிச் சான்றிதழ் கொடுத்தார் என்பது உள்ளிட்ட பல புகார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. தவிர சொந்த ஊரில் மக்கள் பயன்படுத்தி வந்த கிணற்றுக்கு இவர் வேலி போட, அதைப் பிய்த்து எறிந்தனர் கிராம மக்கள்.

விடிந்தால் இன்று ஜெகதீஸ்வரி குறித்து என்ன பஞ்சாயத்து என தவெக-வினரே எதிர்பார்க்கிற அளவுக்கு சர்ச்சை சுழலில் சிக்கியிருக்கிறார்.

செல்வத்தின் தியேட்டர் சேட்டை!

விருதுநகர் தொகுதியை கீர்த்தனா கேட்ட போது, 'மக்கள் மன்றம் மூலம் இங்கு நிறைய வேலைகள் செஞ்சிருக்கேன், அதனால விருதுநகர் எனக்குதான் வேணும்' என அடம்பிடித்து தொகுதியை வாங்கி வெற்றியும் பெற்றவர் செல்வம்.

இவராலேயே 'விருதை மகள்' என்கிற அடையாளத்துடன் தொகுதியை குறிவைத்த கீர்த்தனாவுக்கு இந்த தொகுதியைத் தராமல் சிவகாசிக்கு அனுப்பியது கட்சி. இதனால் சிவகாசியை ரொம்பவே நம்பியிருந்த மக்கள் மன்றம் தொட்டு பணிபுரிந்த மாரிசெல்வத்துக்கு கடைசியில் தேர்தலில் சீட்டே கிடைக்காமல் போனது.

உள்ளூரில் நகராட்சி பணிகளுக்கான டெண்டர் போன்ற விஷயங்களில் இவரது பெயர் அடிபடும் செய்தி மீடியாவிலேயே வந்து விட்டது. கடந்த காலங்களில் அதிமுக எம்.எல்.ஏ-விடமிருந்த ஒருவரைத்தான் தன் பக்கத்தில் இவர் தற்போது வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். அவர்தான் இவருக்க்கு 'ரூட்' போட்டுத் தருகிறார் என்கிறார்கள்.

சமீபத்தில் ஜனநாயகன் ஓடிக் கொண்டிருந்த தியேட்டரில் இவர் தேர்தலில் வென்ற சாதனையை இடைவேளையின்போது ஓடவிட்டது சலசலப்பை உண்டாக்கியது.

தியேட்டரில் இடைவேளையின்போது விளம்பர ஸ்லைடுகள் காட்ட வேண்டுமென்றாலும், அதற்கும் சில நடைமுறைகள் இருக்கின்றன. அந்த நடைமுறைகளைப் பின்பற்றினாரா தெரியவில்லை. தன் பெருமைகளைச் சொன்ன அதே விளம்பரத்தில் எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக-வின் விஜயபிரபாகரன் தோல்வி என்பதையும் அழுத்திக் காட்ட... தேமுதிக வட்டாரம் கொதித்துப் போனது. பிறகு சமாளிக்க, அவர் என் சகோதரர் மாதிரி என்றெல்லாம் ஐஸ் வைத்ததும் நினைவிருக்கலாம்.

மற்றொரு எம்.எல்.ஏ-வும் ஒரு புது கார் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்க, நேக்காக அதில் இருந்து விலகி விட்டாராம்.

விருதுநகர் தவெக விஷயத்தில் விஜய் என்ன செய்யப் போகிறார் என்பது கூடிய சீக்கிரத்தில் தெரியவருமென்கிறார்கள்.!