📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 23, 2026 11:03 PM

சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.13 அதிகரிப்பு: டீ, காபி, இனிப்புகள் விலையும் உயர வாய்ப்பு

சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.13 அதிகரிப்பு: டீ, காபி, இனிப்புகள் விலையும் உயர வாய்ப்பு

சென்னை : பண்டிகை நேரத்தில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதால், மற்ற உணவு பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், சர்க்கரை உற்பத்திக்கான கரும்பு சாகுபடி, ஐந்து கோடி ஏக்கரில் நடப்பது வழக்கம். ஆனால், பல மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை, விலை கட்டுப்படியாகாதது, வேலையாள் கூலி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு தேவையான கரும்புக்கு, அண்டை மாநிலங்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரும்பு உற்பத்தி குறைவு காரணமாக, பல சர்க்கரை ஆலைகள் உற்பத்தியின்றி மூடி கிடக்கின்றன. சர்க்கரை உற்பத்தி குறைந்ததால், விலை உயரத் தொடங்கி உள்ளது. தற்போது, நாடு முழுதும் பண்டிகை காலம் துவங்கி உள்ளது. ஓணம், விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, துர்காபூஜை, தீபாவளி என, அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளன.

சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைவை கருத்தில் வைத்து, விலையை ஏற்றுவதற்காக, நாடு முழுதும் உள்ள 'ஆன்லைன்' மொத்த வர்த்தகர்கள், சர்க்கரையை பதுக்கி வைப்பதை அதிகரித்துள்ளனர். இதனால், செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு மாதத்திற்கு முன், கிலோ, 47 ரூபாய்க்கு விற்கப்பட்ட, ஒரு கிலோ சர்க்கரை, தற்போது, 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நேரத்தில் இந்த விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை, கோயம்பேடு மளிகை சந்தை வியாபாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி இல்லாததால், வெளிமாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. வாகன வாடகை, ஏற்றி இறக்கும் கூலி உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால், அதைக் காரணம் காட்டி, சர்க்கரை விலையை மொத்த வியாபாரிகள் உயர்த்தி உள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரை, சர்க்கரை விலை குறைவதற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் அக்டோபரில், கரும்பு அறுவடை துவங்கினால், விலை குறையுமா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. சர்க்கரை விலை உயர்வால், கடைகளில் டீ, காபி விலையும் உயர்ந்துள்ளது. இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலையும், அடுத்தடுத்து உயரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் தலைவர் பிரகாஷ் நாய்க்நவரே அளித்த பேட்டி: தற்போதைய நிலவரப்படி, தென் அமெரிக்க நாடான பிரேசில் மட்டுமே, சர்க்கரை வாங்குவதற்கு உகந்த நாடாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, சொந்த பற்றாக்குறையை சமாளித்து வருவதால், அந்நாட்டை நம்ப முடியாது. பிரேசிலில் இருந்து சரக்கு கப்பல்கள் நம் துறைமுகங்களுக்கு வர, 40 - 45 நாட்களாகும். கப்பலில் சர்க்கரை வந்திறங்கிய பின், துறைமுகத்திலிருந்து ஆலைகளுக்கு செல்ல, கூடுதல் காலம் தேவைப்படும். எனவே, அக்டோபர் 15-க்குள் எவ்வளவு சர்க்கரை வந்து சேரும் என துல்லியமாக மதிப்பிடுவது கடினம்.

ஆனால், அதற்குள் சில சரக்கு கப்பல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பதுக்கல்காரர்கள் மீது மத்திய அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளால், சர்க்கரை விலை குறைய துவங்கி உள்ளது. எந்தவொரு அசாதாரண சூழலும் ஏற்படாது. மக்கள் பீதியடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.