IND vs SL 2வது டெஸ்ட் கடைசி நாள் மழை பெய்ய வாய்ப்பிருக்கா? வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?
IND vs SL 2வது டெஸ்ட் கடைசி நாள் மழை பெய்ய வாய்ப்பிருக்கா? வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?
கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளான வியாழக்கிழமை அன்று வானிலை ஆட்டத்தை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் ஐந்தாம் நாளில் பல்வேறு கட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டமும் மழை காரணமாக நடுவர்களால் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை 265-8 என்ற நிலையில் இருந்து தொடர்ந்து விளையாடி 290 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஃபாலோ-ஆன் வழங்கியதை அடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 72.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை அணியின் பசிந்து சூரியபண்டார முதல் இன்னிங்ஸில் 80 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 92 ரன்களும் எடுத்து அசத்தினார்.
கமிந்து மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தார். மேலும், முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் குவித்த சோனல் தினுஷா, நான்காம் நாள் ஆட்ட முடிவில் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் மானவ் சுதார் 18 ஓவர்களில் 81 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வானிலை கணிப்பின்படி, ஐந்தாம் நாள் காலையில் கொழும்பின் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். மழை பொழிவிற்கான வாய்ப்பு 87 சதவீதமாகவும், மேகமூட்டம் 82 சதவீதமாகவும், ஈரப்பதம் 81 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
மதிய வேளையில் வானிலை தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் மழை பெய்ய 70 சதவீத வாய்ப்பு உள்ளது, அதே நேரத்தில் மேகமூட்டம் 97 சதவீதமாகவும், ஈரப்பதம் 77 சதவீதமாகவும் இருக்கும்.
மாலை நேர ஆட்டப் பகுதியிலும் வானிலை தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக குறையும். இக்காலக்கட்டத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 89 சதவீதமாகவும், மேகமூட்டம் 98 சதவீதமாகவும், ஈரப்பதத்தின் அளவு 81 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.