CWG 2026: ஒரே நாளில் இந்தியா 6 தங்கம்.. குத்துச்சண்டையில் தங்க வேட்டை.. பதக்க பட்டியலில் உயர்வு
CWG 2026: ஒரே நாளில் இந்தியா 6 தங்கம்.. குத்துச்சண்டையில் தங்க வேட்டை.. பதக்க பட்டியலில் உயர்வு
கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் போட்டிகளின் 10-வது நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் குத்துச்சண்டை, தடகளம் மற்றும் ஜூடோ போன்ற பிரிவுகளில் தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கங்களை வாரிக் குவித்துள்ளனர்.
மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் தங்களது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநிறுத்தினர். மகளிர் 54 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் பிரீத்தி பவார் கனடாவின் ஸ்கார்லெட் டெல்கடோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். அதேபோல், மகளிர் 57 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய நடப்பு உலக சாம்பியன் ஜெய்ஸ்மின் லம்போரியா, வடக்கு அயர்லாந்தின் மைக்கேலா வால்ஷை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
மகளிர் 51 கிலோ எடைப் பிரிவில் சாக்ஷி சௌத்ரி, இங்கிலாந்தின் 19 வயதான ரூபி ஒயிட்டை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் மூன்றாவது தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். மகளிர் 70 கிலோ எடைப் பிரிவில் அருந்ததி சௌத்ரி தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் 5-0 என்ற கணக்கில் தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு விறுவிறுப்பான மகளிர் பிரிவில், பிரியா கங்காஸ் கனடாவின் அல்-அஹ்மதியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
ஆண்கள் பிரிவில், 55 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜடுமணி சிங், ஆஸ்திரேலியாவின் ஜெய் டிக்சனிடம் போராடித் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளத்தில் ஆண்கள் F57 குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கங்கள் கிடைத்தன. சோமன் ராணா 13.40 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அதே பிரிவில் இந்தியாவின் சுபம் ஜூயல் 13.28 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஆண்கள் மும்முறை தாண்டுதல் போட்டியிலும் இந்திய வீரர்கள் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தினர். பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.
மகளிர் ஜூடோ போட்டியில் இந்தியாவின் உன்னதி சர்மா சிறப்பாகச் செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அவர் தென்னாப்பிரிக்காவின் ஸ்கை க்னோஸ்டரை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்தார். இன்று ஒரே நாளில் 6 தங்க பதக்கம் வென்ற இந்திய அணி, 11 தங்கம்,15 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கம் வென்று 34 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்து 4வது இடம் வரை முன்னேறியுள்ளது.