எல்லை மீறிய வைபவ் சூர்யவன்ஷி.. விதிகளை மீறிய செயல்.. ஐசிசி தண்டனை கிடைக்க வாய்ப்பு
எல்லை மீறிய வைபவ் சூர்யவன்ஷி.. விதிகளை மீறிய செயல்.. ஐசிசி தண்டனை கிடைக்க வாய்ப்பு
தம்புள்ளா: இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி விதிகளின் கீழ் தடை அல்லது அபராதம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தம்புள்ளாவில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டத்தில், சூப்பர் ஓவர் முடிவில் இந்திய 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணியிடம் தோல்வியடைந்தது.
சூப்பர் ஓவரில் 19 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்தியா, 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டம் முடிந்த பிறகு, மைதானத்தில் இருந்து வெளியேறிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை பந்துவீச்சாளர் குகதாஸ் மதுலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்தார். அப்போது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை வீரர் ஒருவரின் நெஞ்சில் சூர்யவன்ஷி பலமாகத் தள்ளி மோதலில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த மூத்த வீரர் நிரோஷன் டிக்வெல்லா தலையிட்டு இருவரையும் விலக்கி வைத்தார்.
இதற்கு முன்பாக, ஆட்டத்தின் போது வீசப்பட்ட நோ-பால் விவகாரத்தில் கேப்டன் திலக் வர்மா நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த போது, சூர்யவன்ஷியும் மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களிடம் ஆக்ரோஷமாகப் பேசினார். பின்னர் பயிற்சியாளர் ஹிருஷிகேஷ் கனித்கர் அவரைத் தடுத்து அழைத்துச் சென்றார்.
சூர்யவன்ஷியின் இந்த எல்லைமீறிய செயல் ஐசிசி நடத்தை விதிமுறை 2.12-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மைதானத்தில் வீரர்கள் அல்லது நடுவர்களிடம் தேவையற்ற உடல் ரீதியான மோதலில் ஈடுபடுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 பார்டர்-கவாஸ்கர் தொடரின் போது இதேபோன்ற மோதலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போட்டி நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் இந்த மோதல் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அவர் சூர்யவன்ஷிக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அல்லது போட்டி கட்டணத்தில் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் அசத்தி, விரைவில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகவுள்ள வேளையில், வைபவ் சூர்யவன்ஷியின் இந்த ஒழுங்கீன செயல் அவருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இலங்கை வீரர் தான் அவரை சீண்டினார் எனக் கூறப்பட்டாலும் வைபவ் அதற்காக கையை வைத்து தள்ளி இருக்கக் கூடாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.