📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 25, 2026 09:33 AM

ஹார்முஸ் பதற்றம்... ஆபத்தில் இந்திய நீலப் பொருளாதாரம்!

ஹார்முஸ் பதற்றம்... ஆபத்தில் இந்திய நீலப் பொருளாதாரம்!

ஹார்முஸ் பதற்றம்... ஆபத்தில் இந்திய நீலப் பொருளாதாரம்!

- புதுமடம் ஜாபர் அலி

ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு கப்பல் நின்றால், இந்தியாவில் பெட்ரோல் விலை மட்டுமல்ல; துறைமுகங்கள் முதல் மீனவர்களின் வாழ்வாதாரம் வரை அனைத்தும் பாதிக்கப்படும். உலக வரைபடத்தில் சிறியதாகத் தெரியும் அந்தக் கடல்வழித்தடம்தான், இந்தியாவின் நீலப் பொருளாதாரத்தின் (Blue Economy) உயிர்நாடி.

கடல் என்பது நாடுகளின் எல்லைகளை இணைக்கும் இயற்கை வளம் மட்டுமல்ல; உலகப் பொருளாதாரத்தின் ஆதாரம். உலக வர்த்தகத்தில் சுமார் 80 சதவிகித சரக்குகள் கடல் வழியாகவே செல்கின்றன. மீன்வளம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, கடல்சார் சுற்றுலா, கடலடிக் கனிம வளங்கள், கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட கடலை மையமாகக்கொண்ட அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த வடிவமே நீலப் பொருளாதாரம். அதனால்தான், அமெரிக்கா மீண்டும் ஈரானுக்கு எதிரான கடல்சார் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் சூழலும், ஹார்முஸ் ஜலசந்தியில் அதிகரித்துவரும் பதற்றமும் உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளன. இது உலக வர்த்தகத்தின் இதயத் துடிப்பையே பாதிக்கக்கூடிய அபாயமாக மாறியிருக்கிறது.

உலகின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20 சதவிகிதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. இந்தக் கடல்வழியில் பாதிப்பு ஏற்பட்டால், கப்பல் போக்குவரத்துச் செலவும், காப்பீட்டுக் கட்டணமும் உயரும். இதனால் உலகளாவிய பொருள் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, சர்வதேச வர்த்தகத்தில் மந்தநிலையை உருவாக்கும்.

இந்தியாவுக்கு இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். ஏனெனில், நாட்டின் கச்சா எண்ணெய் தேவையின் பெரும் பகுதி வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் எந்த இடையூறும், இந்தியாவின் எண்ணெய் விநியோகத்தை நேரடியாக பாதிக்கும்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதன் தாக்கம் எல்லாத் துறைகளிலும் எதிரொலிக்கும். பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி விலை உயர்வதால், போக்குவரத்து முதல் விவசாயம், தொழிற்துறை வரை அனைத்திலும் செலவு அதிகரிக்கும். இதனால் பணவீக்கம் உயர்ந்து, அன்றாட வாழ்க்கைச் செலவும் கூடும்.

அதேநேரத்தில், அதிக விலைக்கு எண்ணெய்யை இறக்குமதி செய்யவேண்டிய சூழல், நாட்டின் பொருளாதாரச் சுமையையும் அதிகரிக்கும். அதிக அந்நியச் செலாவணி தேவைப்படுவதால், ரூபாயின் மதிப்பு குறையலாம். அதன் விளைவாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள், மின்னணுச் சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலையும் உயரும். இது நாட்டின் பொருளாதாரத்தின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

இதன் மறைமுகத் தாக்கம் இந்தியாவின் நீலப் பொருளாதாரத்திலும் தென்படும். கப்பல் போக்குவரத்துக் கட்டணம் உயர்வதும், சரக்கு விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதும் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்திறனைக் குறைக்கும். சென்னை, மும்பை, கொச்சி, காண்ட்லா உள்ளிட்ட முக்கியத் துறைமுகங்கள் வழியாக நடைபெறும் சரக்கு இயக்கம் பாதிக்கப்பட்டால், ஏற்றுமதி வருவாய் மட்டுமல்ல, அந்நியச் செலாவணி வருவாயும் குறையும்.

அதோடு, கடல்சார் பாதுகாப்பு நெருக்கடியானது மீன்பிடித் தொழில், துறைமுகச் செயல்பாடுகள், கடலோர மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றையும் பாதிக்கும். இந்தியா முன்னெடுத்துவரும் சாகர்மாலா, துறைமுக மேம்பாடு, கடல்சார் முதலீடுகள், கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கடலடிக் கனிம வள மேம்பாடு போன்ற நீலப் பொருளாதாரத் திட்டங்களின் வேகமும் இதனால் குறையக்கூடும்.

ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை அதன் நிலப்பரப்பு மட்டுமல்ல; கடல் எல்லைகளும் தீர்மானிக்கின்றன. எனவே, ஹார்முஸ் ஜலசந்தியில் உருவாகும் பாதுகாப்பு நெருக்கடி என்பது ஒரு பிராந்தியப் பிரச்னை அல்ல. அது உலக வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு, கடல்சார் முதலீடுகள், நீலப் பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் சோதிக்கும் உலகளாவிய சவாலாகும்.

இந்தியாவைப் போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரத்துக்கு, இது எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம், ஏற்றுமதி பாதிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு, தொழில்துறைச் செலவு அதிகரிப்பு என பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

இதனால்தான், ஈரான் - அமெரிக்கப் பிரச்னையின் ஒரு தாக்கமாக ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களைத் தடுத்து, ஈரான் தன்னுடைய வலுவை உலகத்துக்குக் காட்டிவருகிறது. ஈரான் - அமெரிக்கா என இரு பக்கமும் நடுநிலையான உறவை மேம்படுத்தி வைத்திருக்கும் இந்தியா, பெரிய பிரச்னைகள் இன்றி, இந்தியாவுக்கு எண்ணெய் சரக்குக் கப்பல்களை சங்கடமின்றி இயங்கவைக்கிறது.

ஆனாலும், எல்லா நாடுகளுக்கும் ஏற்படுத்திய சிக்கல்களைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் சில சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது ஈரான். அது இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சாதுர்யமான வெளிநாட்டுக் கொள்கைகள் வாயிலாக, இந்தியாவுக்கான பாதிப்பு குறைத்திருந்தாலும், பாதிப்பு பாதிப்புதான். சவாலான இந்த விஷயத்தை, இந்தியா தொடர்ந்து திறம்படக் கையாண்டால் தான், பொருளாதார பாதிப்பு மேலும் பெரிதாகாமல் இருக்கும்.

ஹார்முஸ் ஜலசந்தியில் எழும் அலைகள், இந்தியப் பொருளாதாரக் கரைகளை பெயர்க்கக் கூடாது.