டைட்டானிக் படம் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்டதா? நடிகர் சூரி உடைத்த மெகா சீக்ரெட்.!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வரவேற்பை பெற்று, தற்போது கதாநாயகனாக நடித்து வரும் சூரியின் நடிப்பில் மண்டாடி திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்குப் பிறகு மிகவும் பேசப்பட்ட காமெடி நடிகராக சந்தானம் புகழ்பெற்றார். அவர் கதாநாயகனாக நடிக்க சென்றதற்கு பிறகு அவரது இடத்தை பிடித்தார் சூரி. சூரியும் கதாநாயகனாக நடிக்க, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் காமெடி திரைப்படங்களை விடுத்து முழுக்க முழுக்க கதாநாயகனாகவே நடித்து வருகிறார்.
சமீபத்தில் மண்டாடி திரைப்படத்தின் சூட்டிங் நிறைவு பெற்று, இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தின் போஸ்டர் காட்சிகள் பார்க்கும் போது, இத்திரைப்படம் கடலை மையப்படுத்திய கதைக் கருவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் படத்தின் தலைப்பும் கப்பலை வழிநடத்தும் ஒரு தலைவனை குறிக்கிறது என இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தெரிவித்திருக்கிறார்.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மண்டாடி திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் டைட்டானிக் திரைப்படமே நீச்சல் குளத்தில் தான் எடுக்கப்பட்டது என இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் சூரி பேசுகையில், “மண்டாடி திரைப்படத்தின் 80% காட்சிகள் நீச்சல் குளத்திலும், 20% காட்சிகள் கடலிலும் எடுக்கப்படும் என இயக்குநர் சொன்னார். நீச்சல் குளத்தில் காட்சிகளை படமாக்குவது, எனக்கு நெருடலாகவே இருந்தது. இருப்பினும் உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் திரைப்படத்தையே நீச்சல் குளத்தில் தான் எடுத்தார்கள் என இயக்குநர் வெற்றிமாறனே சொல்லி விட்டார். டைட்டானிக் போன்றே நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட 5 படங்களை அவர் சொன்னதாக என்னிடம் சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்புத் தொடங்கி 1 வாரம் ஆனது; 10 நாட்கள் ஆனது; 1 மாதம் ஆனது; 2 மாதங்கள் என பல நாட்கள் கடந்தும் நாங்கள் அங்கிருந்து திரும்பவே இல்லை” என நடிகர் சூரி கூறினார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் காதல் காவியம் மற்றும் கடலில் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் டைட்டானிக். 1912 ஆம் ஆண்டு ஆர்.எம்.எஸ். என்ற டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கும் விபத்தை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.
11 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்த டைட்டானிக் திரைப்படம், உலக அளவில் 2 பில்லியன் டாலருக்கும் மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இத்திரைப்படத்தின் சில காட்சிகள் நீச்சல் குளத்தில் தான் எடுக்கப்பட்டது என வெற்றிமாறன் தெரிவித்தார் என இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகர் சூரி தெரிவித்திருப்பது, தற்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “எவ்வளவு கடினமான வேலைகளை கொடுத்தாலும், அதை செய்யக் கூடியவர் நடிகர் சூரி. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் வலிமையானவர். அவருடைய வளர்ச்சியை அவர் மதிக்கிறார்; அது தான் இயக்குநர் என்ன சொன்னாலும், செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு கொடுத்திருக்கிறது. இன்னும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். ஆனால் சண்டைக் காட்சிகளை கவனமாக கையாள வேண்டும்” எனப் பேசினார்.
மண்டாடி படத்தை சீனாவிலும் வெளியிட வேண்டும் என சத்யராஜ் தெரிவித்திருக்கிறார். அப்படி இத்திரைப்படம் சீனாவில் வெளியானால் நிச்சயமாக 1,000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.