ஹர்திக் மோசமான கேப்டன்..அவருக்காக CSK இளம் வீரர்களை விடாதீங்க...டென்ஷனான சடகோபன் ரமேஷ்!
டெல்லி : ஐபிஎல் 2026 தொடர் முடிவடைந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் தொடர்பான டிரேட் (Trade) வூகங்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் தீயைப் பற்ற வைத்துள்ளன. குறிப்பாக, மும்பை அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹார்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு மாறப்போவதாகத் தகவல்கள் பரவிவரும் நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சடகோபன் ரமேஷ் அளித்துள்ள கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளுமே மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது மும்பை அணி. இதனால், அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், சிஎஸ்கே அணி ஹார்திக் பாண்டியாவைத் தன்வசப்படுத்தத் தனது இளம் வீரர்களைப் விட்டு விடக்கூடாது என்று ரமேஷ் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியதாவது, ஹார்திக் பாண்டியாவை ஒரு அசாத்தியமான கிரிக்கெட் வீரராகவும், அதே சமயம் பலவீனமான கேப்டனாகவும் தான் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை அவர் சாம்பியனாக்கியிருந்தாலும், அவர் சென்ற பிறகும் கூட குஜராத் அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற மும்பை அணியின் நிலையோ அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.
"மூத்த வீரர்களின் மோசமான ஃபார்ம் அவருக்குக் கைடுக்கவில்லை என்று மக்கள் கூறலாம். ஆனால், பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் ஹார்திக்கின் சொந்த மோசமான ஃபார்ம்தான் மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. 10 போட்டிகளில் அவர் வீசியது வெறும் 22 ஓவர்கள் மட்டுமே. அதாவது போட்டிக்கு சராசரியாக 2 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். முக்கியமான கட்டங்களில் பந்துவீச வராமலும், பேட்டிங்கில் மிகக் கீழே இறங்கியும் தன்னைத் அவர் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டார்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
"ஒரு நல்ல கேப்டன் முன்மாதிரியாக நின்று கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வார். குஜராத்தில் அதைச் செய்த ஹார்திக், மும்பையில் முற்றிலுமாகத் தோற்றுப் போனார். குஜராத்தில் அவர் அந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டதற்குப் பின்னால் ஆஷிஷ் நெஹ்ராவின் கடுமையான உழைப்பு இருந்தது. எனவே, ஹார்திக்கிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வர வேண்டுமென்றால், சரியான பயிற்சியாளரும், நல்ல கேப்டன்சியும் அவசியம்" என்று ரமேஷ் சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போதுவரை சிஎஸ்கே அல்லது மும்பை இந்தியன்ஸ் தரப்பில் இருந்து ஹார்திக் பாண்டியா டிரேட் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், சடகோபன் ரமேஷின் இந்த வெளிப்படையான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.