📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 01, 2026 10:03 PM

ஈரானைக் கடுமையாய்த் தாக்கப்போவதாக டிரம்ப் சூளுரை

ஈரானைக் கடுமையாய்த் தாக்கப்போவதாக டிரம்ப் சூளுரை

வா‌‌‌ஷிங்டன்: ஈரானைக் கடுமையாய்த் தாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.

இருதரப்பும் கடந்த சில வாரங்களில் முதன்முறையாகத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) மோதிக்கொண்டன. இந்நிலையில், ஈரானின் பொருளியலை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட நெருக்குதலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக அமெரிக்க நிதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஆறு மாதங்களாக நீடிக்கும் போருக்குப் பிறகும் இரு தரப்பினருக்கும் இடையே எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஈரான், வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையைப் போக்குவரத்துக்கு மூடியுள்ளது. அமெரிக்காவோ ஈரானிய துறைமுகங்களின் மீதான கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானியத் தீவொன்றின்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளை ஈரான் உடனடியாகத் தாக்கியது.

அண்மை மோதல், மீண்டும் பெரிய போர் உருவெடுக்குமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. அதேநேரம், இதற்குக் கண்டிப்பாகப் பதிலடி தரப்படும் என்று அமெரிக்க அதிபர் சூளுரைத்துள்ளார்.

“நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்,” என்று திரு டிரம்ப் கூறியதாக ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

லராக் தீவில் ஈரானின் ஏவுகணைகள் செலுத்தும் சாதனங்களைத் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்தது. முக்கியக் கப்பல் பாதையில் ஈரான் கண்ணிவெடிகள் வைப்பதைத் தடுப்பது அதன் நோக்கம்.

பதிலுக்கு, ஜோர்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் கொண்டு ஈரான் தாக்கியது.