இந்திய ஜிடிபி குறித்து பாஜக பெருமிதம்: வேலைவாய்ப்புகள் எங்கே என காங். கேள்வி
புதுடெல்லி: நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான அரசியல் விவாதம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான பொருளாதார மேலாண்மையே இந்தச் சாதனைக்கு காரணம்” என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெறுமனே ஜிடிபி எண்களை மட்டும் வைத்து நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மதிப்பிட முடியாது.
மத்திய அரசு குறிப்பிட்டுள்ள இந்த 7.8 சதவீத வளர்ச்சியால் நாட்டின் இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் என்ன பயன் கிடைத்தது? நாட்டின் உற்பத்தித் துறை, சிறு, குறு தொழில்கள் மற்றும் முறைசாரா துறைகளின் நிலை என்ன?
நாட்டின் 80% மக்கள் இன்னும் இலவச ரேஷன் தானியங்களை நம்பி வாழும் நிலையில், இந்த வளர்ச்சி யாருக்கானது? ஜிடிபி உயர்வு என்பது தேசிய உற்பத்தியை மட்டுமே குறிக்குமே தவிர, வேலைவாய்ப்பையோ அல்லது ஊதிய உயர்வையோ குறிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ‘உறுதியான வளர்ச்சி’ என பாஜக முன்னிறுத்தும் அதே வேளையில், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.