திமுக ஆட்சியில் துாய்மைப்பணியாளர் போராட்டம்; உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
சென்னை: கடந்த ஆட்சி காலத்தில் 100 நாட்கள், 150 நாட்கள் என துாய்மைப்பணியாளர்கள் தொடர்ந்து போராடி கொண்டே இருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறேன் என உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.
தூய்மை பணியாளர்களின் 15 நாள் போராட்டம் குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடி கொண்டு இருக்கிறார்கள். இன்றுடன் அவர்கள் போராட்டம் 15வது நாளை எட்டியது. சில தினங்களுக்கு முன் அமைச்சர் ராஜ்மோகன் வெகுவிரைவில் தீர்வு எட்டப்படும் என கூறினார்.
ஆனால் இதுவரைக்கும் எந்த சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. இந்த துறைக்கு பொறுப்பு அமைச்சர் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பதற்கு தூய்மை பணியாளர்கள் போராடி கொண்டு இருக்கின்றனர். தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை முதல்வர் விஜய் எப்பொழுது நிறைவேற்றுவார். தூய்மை பணியாளர்களை சந்தித்து முதல்வர் விஜய் பேசுவாரா? இவ்வாறு உதயநிதி பேசினார்.
இதற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்து பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குறிப்பிட்டது போல, போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்கள் கஷ்டத்தை அவையில் விரிவாக சொல்லி இருக்கிறோம். அதில் 15 நாட்கள் ஆனதை அவர் சுட்டி காண்பித்தார். கடந்த ஆட்சி காலத்தில் 100 நாட்கள், 150 நாட்கள் அவர்கள் தொடர்ந்து போராடி கொண்டே இருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
பல கோரிக்கைகள் நிறைவேற்ற கோப்புகள் தயாராக இருக்கிறது. அவர்களது கோரிக்கைகளில் நிதி சார்ந்த பிரச்னைகளும் இருக்கிறது. இந்த சூழலில் தான் நாங்கள் அரவணைத்து கொண்டு செல்கிறோம். பல சங்கங்கள் இருக்கின்றன. எல்லோரையும் ஒன்று சேர்த்து வெகு விரைவில் தீர்வுகளையோ, பேச்சு வார்த்தைகளையோ எடுக்க போகிறோம். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.