IND vs AFG: பும்ராவை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய வைபவ் சூர்யவன்ஷி.. வலைப் பயிற்சியில் சுவாரஸ்யம்
IND vs AFG: பும்ராவை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய வைபவ் சூர்யவன்ஷி.. வலைப் பயிற்சியில் சுவாரஸ்யம்
மும்பை: இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வலைப்பயிற்சியில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி திணறினார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், அணிக்குத் திரும்பியுள்ள பும்ரா, சூர்யவன்ஷிக்கு கடும் சவாலாக விளங்கினார்.
வலைப்பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள சூர்யவன்ஷி தடுமாறினார். குறிப்பாக, பும்ராவின் பந்துவீச்சில் அவர் மிகவும் திணறினார். பும்ரா வீசிய முதல் இரண்டு பந்துகளின் வேகத்தைக் கணிக்க முடியாமல் சூர்யவன்ஷி தடுமாறினார். மூன்றாவது பந்தில் வீசப்பட்ட துல்லியமான யார்க்கரை அவர் மிகவும் சிரமப்பட்டு தடுத்தார்.
நான்காவது பந்து அவரது பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. இறுதியாக வீசப்பட்ட ஃபுல்லர் லென்த் பந்தை மட்டுமே அவரால் மைதானத்தின் நேர் திசையில் அடிக்க முடிந்தது. மேலும், கேட்ச் பிடிக்கும் பயிற்சியிலும் சூர்யவன்ஷி தடுமாற்றம் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய பிறகு, சூர்யவன்ஷி சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து டி20 கிரிக்கெட்டுக்கு மாற வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் இருந்தது. இதனால், இந்த வலைப்பயிற்சி அவருக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அவரது இந்த தடுமாற்றம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜிங்கியா ரஹானே, சாம்சன் அபிஷேக் தொடக்க ஜோடிக்கு ஆதரவு தெரிவித்தார். சூர்யவன்ஷி தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்று கூறிய அவர், இளம் வீரரான சூர்யவன்ஷி தனது இயல்பான ஆட்டத்தை தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.