IND vs WI 5வது டி20 மழையால் ரத்தானால் யாருக்கு கோப்பை? டிஎல்எஸ், ரிசர்வ் டே விதிகள் என்ன?
IND vs WI 5வது டி20 மழையால் ரத்தானால் யாருக்கு கோப்பை? டிஎல்எஸ், ரிசர்வ் டே விதிகள் என்ன?
பெங்களூர்: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கோப்பையை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட உள்ளது. எனினும் பெங்களூருவில் கனமழை அச்சுறுத்தல் உள்ளதால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மழை பெய்து போட்டி ரத்தானால் கோப்பை எந்த அணிக்கு வழங்கப்படும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வானிலை மையத் தகவல்படி, பெங்களூருவில் மாலை 4.30 மற்றும் 5.30 மணி அளவில் மழை பெய்ய 70 சதவீத வாய்ப்புள்ளது. டாஸ் போடும் நேரமான மாலை 6.30 மணிக்கு 60 சதவீதமும், போட்டி தொடங்கும் இரவு 7.30 மணியளவில் 50 சதவீதமும் மழை பெய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இரவு 10.30 மணிக்கு இந்த வாய்ப்பு 40 சதவீதமாகக் குறையும். வெப்பநிலை 21 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். காற்றில் ஈரப்பதம் 83 முதல் 95 சதவீதம் வரை நிலவும்.
மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால், விதிகளின்படி அதே நாளில் போட்டியை நடத்தி முடிக்க நடுவர்கள் முயற்சிப்பார்கள். மழை காரணமாக தொடக்கம் தாமதமானால் அல்லது நடுவில் ஆட்டம் நின்றால் ஓவர்கள் குறைக்கப்பட்டு, டிஎல்எஸ் முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்படும். போட்டிக்கு முறையான முடிவை அறிவிக்க இரு அணிகளும் தலா குறைந்தபட்சம் 5 ஓவர்களாவது பேட்டிங் செய்திருக்க வேண்டும். போட்டியை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர விதிமுறைகளின்படி கூடுதல் நேரமும் வழங்கப்படும்.
இந்த முக்கியமான போட்டிக்கு மாற்று நாள் (Reserve day) எதுவும் கிடையாது. தொடர்ந்து மழை பெய்து, இரு அணிகளுக்கும் தலா 5 ஓவர்கள் கூட வீச முடியாத சூழல் ஏற்பட்டால் ஆட்டம் முடிவின்றி ரத்து செய்யப்படும். தொடர் தற்போது 2-2 என சமனில் உள்ளதால், போட்டி கைவிடப்பட்டால் தொடர் சமனில் முடிந்து இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.