இரவில் கொட்டி தீர்த்த கனமழை
இரவில் கொட்டி தீர்த்த கனமழை - சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்
சென்னை விமான நிலையத்தில் மழை காரணமாக, 10 வருகை விமானங்கள், 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 22 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
Published : October 17, 2026 at 7:49 AM IST
சென்னை: நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று (அக்டோபர் 16) மாலையிலிருந்து தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக இரவில் அது கனமழையாக மாறி இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் அந்த நேரத்தில் சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்த படியே பறந்து கொண்டிருந்தன.
இதனையடுத்து கொல்கத்தாவில் இருந்து 194 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாத காரணத்தால் கோவைக்கும், கொல்கத்தாவில் இருந்து 162 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.
அதோடு டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கோவை, இலங்கை உள்ளிட்ட 8 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன. வானிலை ஓரளவு சீராகி மழை ஓய்ந்த பின்பு இந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.
அதே போல் சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் கொல்கத்தா, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, இலங்கை ஆகிய இடங்களுக்கு புறப்பட வேண்டிய 12 விமானங்கள், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நேற்று இரவு பெய்த மழை காரணமாக, அங்கு 10 வருகை விமானங்கள், 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 22 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பகுதிகளின் மேலும், தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேலும் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அக்டோபர் 16, 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.