இந்திய அணியில் இடம் மறுப்பு.. இங்கிலாந்து உள்ளூர் அணியில் இணைந்த வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார்
இந்திய அணியில் இடம் மறுப்பு.. இங்கிலாந்து உள்ளூர் அணியில் இணைந்த வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார்
மும்பை: இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில் அபாரமாகப் பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாட்டிங்ஹாம்ஷையர் கவுண்டி அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இங்கிலாந்து கவுண்டி அணியில் இணைய முடிவு செய்துள்ளார். 2026 கவுண்டி டெஸ்ட் சீசனின் கடைசி 2 முதல்தரப் போட்டிகளில் அவர் விளையாட உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 2026 துலீப் டிராபி இறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வெல்ல முகேஷ் குமாரின் பந்துவீச்சு முக்கியப் பங்காற்றியது. இந்த தொடரில் அபாரமாகச் செயல்பட்ட அவர், வெறும் 14.91 சராசரியுடன் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஒட்டுமொத்த தொடரிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்தார்.
பெங்கால் அணியைத் தவிர்த்து, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன்முறையாக வேறு ஒரு அணிக்காக முகேஷ் குமார் ஒப்பந்தமாகியுள்ளது இதுவே முதல் முறையாகும். 32 வயதான இவர், இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள் உட்பட 26 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய முகேஷ் குமார், "சீசனின் மிக முக்கியமான கட்டத்தில் நாட்டிங்ஹாம்ஷையர் அணியில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடுவது எப்போதும் சிறந்த சவாலாகும். எனது புதிய அணியின் வெற்றிக்காக முழு திறமையையும் வெளிப்படுத்துவேன்" என்று உற்சாகமாகக் கூறினார்.
முகேஷ் குமாரின் வருகையை வரவேற்றுள்ள நாட்டிங்ஹாம்ஷையர் தலைமைப் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ், "துலீப் டிராபியில் முகேஷ் குமார் காட்டிய சிறப்பான ஆட்டமும், அவரது அசாத்திய பந்துவீச்சு ரிதமும் கடைசி 2 போட்டிகளில் எங்கள் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்" என்று தெரிவித்து இருக்கிறார். இந்திய அணியில் தனது இடத்தை மீண்டும் பெற இந்த கவுண்டி வாய்ப்பு முகேஷ் குமாருக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.