இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி எப்போது? பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா அதிரடி தகவல்!
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி எப்போது? பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா அதிரடி தகவல்!
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் தனது அசாத்திய பேட்டிங்கால் அனைவரையும் மிரள வைத்த 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, விரைவில் இந்திய அணியில் அறிமுகமாவது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய சீனியர் அணியில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்குத் தேவாஜித் சைகியா பதிலளித்துள்ளார்.
அவர் பேசுகையில், "வைபவ் இந்திய கிரிக்கெட்டின் புதிய அதிசயக் குழந்தை. வரும் நாட்களில் அவர் உலக கிரிக்கெட்டையே ஆளப்போகிறார். எங்களது தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளனர். பெரும்பாலான போட்டிகளை அவர்கள் மைதானத்திற்கு நேரில் சென்றே பார்த்துள்ளனர்" என்றார்.
மேலும் பேசிய சைகியா, "ஜூன் மாத இறுதியில் இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதற்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் கூட்டத்தில், வைபவ்வின் சிறப்பான ஆட்டத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு எது நல்லதோ, அந்த முடிவை தேர்வுக்குழுவினர் எடுப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வைபவ் ஒரு விதிவிலக்கான வீரர். அவர் மிக விரைவில் சர்வதேச எல்லையைக் கடந்து இந்திய அணியில் களமிறங்குவார்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ், 16 போட்டிகளில் 776 ரன்களைக் குவித்தார். இதில் 72 சிக்ஸர்கள் மற்றும் 63 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம், ஒரு சீசனில் 59 சிக்ஸர்கள் அடித்திருந்த கிறிஸ் கெய்லின் சாதனையை வைபவ் முறியடித்தார். மேலும், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த வீரர் மற்றும் ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமாக 1,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.
தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடருக்கான 'இந்தியா ஏ' அணியில் வைபவ் இடம் பெற்றுள்ளார். இந்தத் தொடரில் அவரது செயல்பாடுகளைத் தேர்வுக்குழு உன்னிப்பாகக் கவனித்த பிறகு, அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது இந்திய சீனியர் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 15 வயதிலேயே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை வைபவ் நெருங்கியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.