இந்திய பவுலர்களை திக்குமுக்காட வைத்து.. வரலாற்று சாதனை படைத்த இலங்கை இளம் வீரர் சோனல் தினுஷா
இந்திய பவுலர்களை திக்குமுக்காட வைத்து.. வரலாற்று சாதனை படைத்த இலங்கை இளம் வீரர் சோனல் தினுஷா
கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 வது நாள் ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய இலங்கை அணியின் இளம் ஆல்-ரவுண்டர் சோனல் தினுஷா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பல அரிய சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்க்ஸ்களிலும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக மாறினார்.
கொழும்பு சிங்களா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், 7 வது வரிசையில் களம் இறங்கிய சோனல் தினுஷா 162 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக 6 வது அல்லது அதற்கு கீழ் பேட்டிங் செய்ய வந்து ஒன்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் சதங்களை அடித்த முதல் இலங்கை பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக முதல் டெஸ்டில் அவர் 6 வது வீரராக களம் இறங்கி 100 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 84 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை விளாசிய இரண்டாவது இலங்கை பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் தினுஷா பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1982 இல் துலீப் மெண்டிஸ் இந்த சாதனையைப் படைத்திருந்தார். உலக அளவில் எவர்டன் வீக்ஸ், கேரி சோபர்ஸ் போன்ற ஜாம்பவான்களுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தும் 8 வது சர்வதேச வீரராகவும் சோனல் தினுஷா இணைந்துள்ளார்.
இதோடு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த 7 வது இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அரவிந்தா டி சில்வா, சனத் ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, குமார் சங்கக்காரா, தரங்கா பரணவிதானா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இத்தொடரில் இலங்கை அணியில் அதிக ரன் குவித்துள்ள சோனல் தினுஷாவின் இந்த அபார ஆட்டம் பாராட்டை பெற்றுள்ளது.